மோசடியான நிதி கொடுக்கல் வாங்கல் மற்றும் மோசடியான மின்னஞ்சல் என்பன குறித்து அவதானத்துடன் இருக்க வேண்டும் என பொதுமக்களிடம் மத்திய வங்கி கோரியுள்ளது.
நம்பிக்கைக்குரிய நிறுவனமாக தம்மை அடையாளப்படுத்தும் இந்த மோசடியாளர்கள், மத்திய வங்கியின் சின்னம், மத்திய வங்கியின் தலைமையக புகைப்படம் மற்றும் ஒருசில சிரேஷ்ட அதிகாரிகளின் பெயர்களைப் பயன்படுத்துவதாக தகவல்கள் வெளிப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக போலியான மின்னஞ்சல் முகவரியும் பயன்படுத்தப்படுகின்றன.
ஏதாவது சீட்டிழுப்பின் ஊடாக பரிசு கிடைத்துள்ளதாகத் தெரிவித்து, அந்தப் பரிசைப் பெற்றுக்கொள்ள ஆரம்ப கட்டணத்தை வைப்பிலிடுமாறு குறித்த மோசடியாளர்கள் மின்னஞ்சல் ஊடாக தெரிவிக்கின்றனர்.
அத்துடன், அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்காக தேசிய அடையாள அட்டை இலக்கம், வங்கிக் கணக்கு போன்ற தகவல்களை பெற்றுக்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், இவ்வாறு பணம் வழங்கப்படும் முறைமைக்கும் தமக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
எனவே, சந்தேகத்திற்கிடமான மின்னஞ்சல் கிடைக்கப்பெற்றால் அது குறித்து அருகில் உள்ள காவல் நிலையத்தில் அறிவிக்குமாறு பொதுமக்களிடம் மத்திய வங்கி கோரியுள்ளது.
வழிமூலம்: சூரியன் செய்திகள்