ஊழியர் சம்பள உயர்வு உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ரயில்வே ஊழியர்கள் இன்று (20) நள்ளிரவு தொடக்கம் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.
ரயில்வே நடவடிக்கைகள் மேற்பார்வைச் சங்கம் மற்றும் இலங்கை ரயில்வே காப்பாளர்கள் சங்கம் என்பனவே இக்காலவரையற்ற பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொள்ளப்போவதாக எச்சரித்துள்ளன.
ரயில் சாரதிகள், நிலைய பொறுப்பாதிகள், கட்டுப்பாட்டளர்கள் மற்றும் ரயில் காவலர்கள் என அனைத்து ஊழியர்களும் இப்பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தில் கலந்துகொள்ள வருமாறு ரயில் லொகோமொட்வ் இயக்க பொறியிலாளர் சங்கத்தின் செயலாளர் இந்திக்க தொடங்கொட அழைப்பு விடுத்துள்ளார்.
ரயில் கட்டுப்பாட்டாளர் சங்கத்தின் தலைவர் லால் ஆரியரத்ன கருத்து தெரிவிக்கையில், கடந்த செப்டெம்பர் 20ம் திகதி பிரதமரின் செயலாளருடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலில் 300 ரூபா கொடுப்பனவை இம்மாத சம்பளத்துடன் சேர்க்கவேண்டும் என்று கோரியிருந்தோம். ஆனால் அத்தொகை சம்பளத்துடன் இணைக்கப்படவில்லை. எனவே இப்போராட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க நாம் தீர்மானித்தோம் என்று கூறினார்.
இம்முறை சம்பளமானது வழமையான தொகையை விடவும் குறைவாக இருந்ததாக சுட்டிக்காட்டிய அவர், பிரதமரின் உத்தரவை சரியான முறையில் பின்பற்ற தவறியமையினால் தாம் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.