ஒன்றிணைந்த வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தின் காலி கிளை அங்கத்தவர்கள் சிலர் தமக்கு நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரி இன்று (10) மாவட்டச் செயலகத்தின் முன்பாக போராட்டமொன்றை மேற்கொண்டனர்.
கடந்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் தமக்கு நியமனம் வழங்குவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட போதிலும் தேர்தல் ஆணையாளரின் உத்தரவுக்கமைய அந்நடநவடிக்கை இடைநிறுத்தப்பட்டது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 07ம் திகதி பிரதமர் வேலையில்லா பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்குவதற்காக அழைக்கப்படுவார்கள் என்று தெரிவித்திருந்தார். எனினும் அவ்வாறு எதுவும் நடைபெறவில்லை. எனவே அரசாங்கமும் தேர்தல் ஆணைக்குழுவும் வேலையில்லா பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்குவது தொடர்பில் கலந்துரையாடி தீர்மானிக்க வேண்டும் என இவ்வேலையில்லா பட்டதாரிகள் தெரிவித்துள்ளனர்.
எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பட்டதாரிகள் பின்னர் மாவட்டச் செயலாளர் சோமரத்ன விதானபத்திரவை சந்தித்து மகஜர் ஒன்றையும் கையளித்தனர்.
இதன்போது கருத்து தெரிவித்த மாவட்டச் செயலாளர், காலி மாவட்டத்தில் வேலையில்லா பட்டதாரிகள் 1580 பேருக்கு பட்டதாரி பயிலுநர் நியமனங்கள் வழங்குமாறு அரச நிருவாக சேவை அமைச்சு அறிவித்திருந்த போதிலும் தேர்தல் ஆணையாளரின் உத்தரவுக்கமைய அச்செயற்பாடு இடைநிறுத்தப்பட்டது. எவ்வாறு இருப்பினும் இவ்விடயம் தொடர்பில் குறித்த அமைச்சுக்கு தெரியப்படுத்துவதாகவும் மாவட்டச் செயலாளர் தெரிவித்திருந்தார்.
மூலம் – லங்காதீப
வேலைத்தளம்