தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்காக இன்று (14) ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவதாக அறிவித்திருந்த போதிலும் அதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படவில்லை என தொழிற்சங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முதலாளிமார் சம்மேளனம் தயாரித்து அனுப்பிய புதிய கூட்டு ஒப்பந்தத்தின் நகல் வரைவை தொழிற்சங்கங்கள் நிராகரித்ததையடுத்து இந்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆறு நாள் வேலையில் மாற்றம் மற்றும் பிரதான உடன்படிக்கையில் மாற்றம் இருப்பின் கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடுவது சாத்தியப்படாது என்று முதலாளிமார் சம்மேளனத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தொழிற்சங்கள் தெரிவித்துள்ளன.
தொழிற்சங்க வட்டார தகவல்களுக்கமைய பிரதான உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள வருடத்திற்கு 300 நாட்கள் வேலை வழங்குவது என்பதை இரத்து செய்து 250 நாட்கள் வேலைவழங்குவது என்ற யோசனையை முதலாளிமார் சம்மேளனம் முன்வைத்ததாக தெரிவிக்கப்படுகிறது.
பிரதான உடன்படிக்கை இரத்து செய்யப்படும் பட்சத்தில் தொழிலாளர் பாரிய சிக்கல்களுக்கு முகம் கொடுக்க நேரிடலாம் என்று தொழிற்சங்க வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
பிரதான உடன்படிக்கையின் 8ஆம் 9ஆம் சரத்துகளை நீக்கிவிட்டுச் சில விடயங்களைப் புதிய உடன்படிக்கையில் உள்ளடக்க சம்மேளனம் யோசனை தெரிவித்திருக்கிறது. அவ்வாறு செய்யப்பட்டால், தொழிலாளர்களுக்குரிய ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியம், விடுமுறை கொடுப்பனவு, ஊக்குவிப்பு கொடுப்பனவு, பிரசவகால சகாய நிதியம் என்பவை தொழிலாளர்களுக்கு கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
வேலைத்தளம்/ தினகரன்