மேல் மாகாணத்தில் சிக்கியுள்ள வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்களை, தங்களின் சொந்த இடங்களுக்கு அனுப்புவதற்கு இதுவரையில் சுகாதார துறையினரின் ஆலோசனை இதுவரை கிடைக்கப்பெறவில்லை என காவல்துறை தெரிவித்துள்ளது.
காவல்துறை பேச்சாளர், காவல்துறை அத்தியட்சகர் ஜாலிய சேனாரட்ன இதனைத் தெரிவித்துள்ளார்.
ஊரடங்கு சட்டம் அமுலாகியுள்ள மேல் மாகாணத்திலிருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்ல முடியாத 51 ஆயிரத்து 858 பேர் காவல்துறை நிலையங்களில் பதிவுசெய்யப்பட்டுள்ளனர்.
ஒவ்வொருவர் தொடர்பிலும், காவல்துறையினரால் தகவல் சேகரிக்கப்பட்டுள்ளது.
சுகாதார துறையினரால் அதி அனர்த்த வலயமாக மேல் மாகாணம் அடையாளப்படுத்தப்பட்டு, ஊரடங்கு தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளதுடன், பொதுமக்களின் பயணங்களும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
இவ்வாறான நிலையில், அவர்களை நாட்டின் ஏனைய பகுதிகளுக்கு செல்ல அனுமதிப்பதா? என்பது தொடர்பில் முரண்நிலை தோன்றியுள்ளதாக காவல்துறை பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் ஏனைய பாகங்களில், வழமையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், குறித்த தரப்பினரை அந்தப் பகுதிகளுக்கு அனுப்புவது, நாட்டின் ஏனைய பாகங்களையும் அவதானமிக்க பகுதியாக்குமா? என்பது தொடர்பில் சுகாதார துறையினரால் ஆராயப்பட்டு வருகிறது.
சுகாதார துறையினரின் தீர்மானத்திற்கு அமைய, எதிர்காலத்தில் இறுதி முடிவுக்கு வர முடியுமாக இருக்கும் என காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மூலம் : சூரியன் எப். எம் செய்திகள்