கொழும்பு, கம்பஹா, களுத்துறை, மற்றும் புத்தளம் மாவட்டங்களில் உள்ள அரச மற்றும் தனியார் பிரிவுகளிலும் உள்ள நிறுவன தலைவர்கள் மே மாதம் 4 ஆம் திகதியில் இருந்து தமது அலுவலக மற்றும் சேவை நிலையங்களின் செயற்பாடுகள் எவ்வாறு முன்னெடுக்கப்பட வேண்டும் என்பது தொடர்பில் அடுத்த வாரத்திற்குள் தீர்மானிக்க வேண்டும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு நேற்று வெளியிட்ட ஊரடங்கு சட்டம் தொடர்பான அறிவித்தலில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள் மற்றும் சபைகள் உள்ளிட்ட அரச நிறுவனங்களின் சேவைக்காக பணியாளர்களில் 3 இல் ஒரு பகுதியினரே அழைக்கப்பட வேண்டும்.
எந்த நிறுவனத்திலும் வழங்கப்படும் சேவை முக்கியத்துவம் வாய்ந்தாக இருந்தாலும் அதற்காக குறைந்தளவிலான சேவையாளர்களையே அழைக்க நிறுவனத் தலைவர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
சகல அரச நிறுவனங்களிலும் சேவைக்கு சமூகமளிக்காத அதிகாரிகள் வீட்டிலிருந்து பணிபுரியமுடியும்.
ஒவ்வொரு நிறுவனத்திலும் சேவைக்கு சமூகமளிக்க கூடிய சேவையாளர்களையும் வீட்டிலிருந்து சேவையாற்ற கூடிய சேவையாளர்களையும் தெரிவு செய்ய வேண்டியது நிறுவனத் தலைவர்களின் பொறுப்பாகும்.
இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகள் மற்றும் தொடரூந்துகளில் சேவைக்காக செல்பவர்களுக்கு மாத்திரமே அதில் பயணிக்க அனுமதி வழங்கப்படும்.
கட்டாயமாக சேவைக்கு சமூகமளிக்ககூடியவர்கள் மாத்திரமே சேவைக்கு சமூகமளிக்க வேண்டிய அதேவேளை ஏனையவர்கள் வீட்டில் இருக்க வேண்டும்.
இதேவேளை, அலுவலகங்களை திறந்து பணிகளை மேற்கொள்கின்ற போதும், பயணிகள் போக்குவரத்தின் போதும், விற்பனை நிலையங்களிலும் கொரோனா தடுப்பு சுகாதார நடைமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும்.
கிருமி தொற்று நீக்கம், முகக்கவசம் அணிதல் மற்றும் அவ்வப்போது கைகளை கழுவிக்கொள்ளுதல் மற்றும் சமூக இடைவெளியை பேணுதல் இதில் உள்ளடங்கும்.
எவரேனும் இந்த ஒழுங்குகள் நடைமுறைகளை மீறப்படுகின்றதா என்பது தொடர்பில் காவல்துறையினரும் பாதுகாப்பு படையினரும் மிகவும் விழிப்புடன் இருப்பார்கள் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.