வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையருக்கு வரிச் சலுகையுடனான வாகனக் கொள்வனவுக்கு அனுமதிப்பத்திரம் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படும் செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை என நிதியமைச்சு அறிவித்துள்ளது.
பேஸ்புக் மற்றும் ஏனைய சமூக வலைத்தளங்கள் மற்றும் பல்வேறு ஊடகங்கள் மூலம் பரப்பப்பட்டு வரும் குறித்த மோசடி தொடர்பில் பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என்றும் நிதி அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.
இது தொடர்பில் நிதியமைச்சினால் விடுக்கப்பட்டுள்ள அறிவித்தலிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் நிதி அமைச்சின் வர்த்தக முதலீட்டுக் கொள்கை திணைக்கள கடிதத் தலைப்பு, அதன் திணைக்கள பணிப்பாளர் நாயகத்தின் பதவி மற்றும் பெயரை போலியாக பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட போலி ஆவணமொன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருவதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கை ஊழியர்களுக்கு தீர்வையற்ற வாகனங்களைப் பெறுவது தொடர்பான எவ்வித திட்டத்தையும் நிதி அமைச்சு செயற்படுத்தவில்லை என அமைச்சு சுட்டிக் காட்டியுள்ளது. அத்தகைய திட்டமொன்று செயல்படுத்தப்பட்டு வருவதாக மேற்கொள்ளப்படும் அனைத்து பிரச்சாரங்களும் பொதுமக்களை பிழையாக வழிநடத்துவதும் போலியானதும் என அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
நிதி அமைச்சின் வர்த்தக மற்றும் முதலீட்டுக் கொள்கை திணைக்களத்தால் பொதுமக்களுக்கு வழங்கப்படும் இத்தகைய சேவைகள், திறைசேரியின் உத்தியோகபூர்வ வலைத்தளமான www.treasury.gov.lk இல் காட்சிப்படுத்தப்படுவதாகவும், இவ்வாறான விடயங்களை அதில் உறுதிப்படுத்தி தெரிந்து கொள்ளுமாறும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், தீர்வை சலுகை அனுமதிப்பத்திரம் வழங்கும் சேவைக்காக எந்தவொரு கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை என்பதால், பணமோசடி மோசடி செய்பவர்களிடம் ஏதேனும் பணம் செலுத்தி ஏமாந்திருந்தால், அது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்களுக்கு நிதியமைச்சு அறிவுறுத்தியுள்ளது.