ரயில் இயந்திர சாரதிகள் மாதமொன்றுக்கு 180,000 ரூபா அல்லது 185,000 ரூபாவை வேதனமாக ஈட்டுவதாக போக்குவரத்து பிரதி அமைச்சர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார்.
அத்தியாவசிய பொதுமக்கள் சேவைச் சட்டத்தின் கீழ் ரயில் சேவையை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தி வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை அங்கீகரித்து கொள்வதற்கான பிரேரணை மீது நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற விவாதத்தின் இறுதியில் பதிலளித்து உரையாற்றும் போதே போக்குவரத்து பிரதி அமைச்சர் அபேசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் தெரிவித்துள்ள போக்குவரத்து பிரதி அமைச்சர், இந்த விவகாரத்தை பேசித் தீர்த்துக் கொள்தவதற்கு சந்தர்ப்பங்கள் வழங்கப்பட்டிருந்தன. லொக்கோமோடிவ் (ரயில் என்ஜின்) சாரதி உதவியாளர்களை சேவையில் இணைத்துக்கொள்ளும் நடைமுறையை மாற்றுமாறே இந்த தொழிற்சங்கத்தினர் கோருகின்றனர். பரீட்சைகள் நடத்தாமல் உள்ளிருப்பவர்களையே இணைத்துக் கொள்ளுமாறே இவர்கள் கேட்கின்றனர்’ என்று குறிப்பிட்டார்.
அத்துடன், வேலைநிறுத்த போராட்டத்துக்கு பிரவேசிக்க வேண்டாம் என்று தாம் தொழிற்சங்கத்தினரிடம் வேண்டுகோள் விடுத்திருந்ததாகவும் ஜனாதிபதி செயலாளருக்கும் தொழிற்சங்கத்தினருக்கும் இடையில் நடைபெற்ற நான்கரை மணிநேர பேச்சுவார்த்தைகளின் பின்னர் கடந்த 8 ஆம் திகதி லொக்கோமோட்டிவ் செயற்பாட்டு பொறியிலாளர் சங்கத்தின் செயலாளருக்கும் போக்குவரத்து அமைச்சின் செயலாளருக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கைச்சாத்திட்டப்பட்டதாகவும் போக்குவரத்து பிரதி அமைச்சர் அபேசிங்க தெரிவித்தார்.
எனினும், வேலைநிறுத்த போராட்டத்தை இடைநிறுத்தி வைப்பதாக மேற்படி பேச்சுவார்த்தையின் போது இணக்கம் தெரிவித்து புரிந்துணர்வு ஒப்பந்தத்திலும் கைச்சாத்திட்டுவிட்டு வெளியில் வந்து வேலைநிறுத்த போராட்டத்தை தொழிற்சங்கத்தினர் தொடர்வதாக குற்றஞ்சாட்டிய அவர், அந்த ஒப்பந்தத்தை சபைக்கு ஆற்றுப்படுத்துவதாகவும் கூறினார்.
இதேநேரம், சம்பள பிரச்சினை என்பது பின்னர் கொண்டு வரப்பட்டதொன்றெனவும் இது தொடர்பில் ஏற்கனவே அமைச்சரவை பத்திரமொன்று கொண்டு வரப்பட்டுள்ள போதிலும் சுகாதார அமைச்சரின் கோரிக்கையை அடுத்து இரு வாரங்களுக்கு அது ஒத்திவைக்கப்பட்டிருப்பதாகவும் அசோக அபேயசிங்க தெரிவித்தார்.
ஏனெனில், அந்த அமைச்சரவை பத்திரத்தை நடைமுறைக்கு கொண்டுவரும் பட்சத்தில் சுகாதாரத்துறையில் முரண்பாடு ஏற்படும் என்று சுகாதார அமைச்சர் சுட்டிக்காட்டியிருந்ததாகவும், ஆகையால், இது தொடர்பில் குழுவொன்றை அமைத்து தேசிய சம்பள ஆணைக்குழுவுடன் பேசி தீர்வொன்றை காணும் நிமித்தமே 2 வாரங்களுக்கு மேற்படி அமைச்சரவை பத்திரம் ஒத்திவைக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், இவ்விடயம் தொடர்பில் நிதி அமைச்சின் செயலாளருடன் பேசுவதற்கும் ஜனாதிபதியினால் தொழிற்சங்கத்தினருக்கு வாய்ப்பேற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதி அமைச்சர் அபேசிங்க தெரிவித்தார்.
ரயில் இயந்திர சாரதிகள் நாளொன்றுக்கு 8 மணிநேரம் வேலை செய்வதுடன், 9 மணிநேரம் ஓய்வில் இருக்கின்ற போதிலும், அந்த 9 மணித்தியாலங்களுக்கும் மணித்தியாலமொன்றுக்கு ஒன்றைரை மணித்தியாலத்துக்கான மேலதிக நேர கொடுப்பனவை பெற்றுக்கொள்வதாகவும் அவர்கள் மாதமொன்றுக்கு 180,000 ரூபா அல்லது 185,000 ரூபாவை சம்பளமாக ஈட்டுவதாகவும் பிரதி அமைச்சர் அசோக அபேசிங்க விளக்கமளித்துள்ளார்.