யுத்தத்தின் பின்னர் கல்வியில் பின்னடைவை சந்தித்திருந்த மாணவர்களை மீட்டெடுக்க கரம் கொடுத்த தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நேற்று (11) பாராளுமன்ற உறுப்பினர் நிர்மலநாதன் பிரேரணையை முன்வைத்துள்ளார்.
நேற்று (11) சபை ஒத்திவைப்பு வேளையில் இடம் பெற்ற விவாதத்தின் போது குறித்த பிரேரணை தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதுடன் அவர்களை பணிக்கு உள்வாங்குவது தொடர்பில் கல்வி அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.
பிரேரணையை முன்வைத்த தமிழ் தேசியக் கூடட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவிக்கையில், யாழ்ப்பாண கல்வி வலயத்தில் 75 பேரும், வடமாராட்சியில் 663 பேரும், வலிகாமத்தில் 232 பேரும் தென்மாராட்சியல் 23 பேரும் தீவகத்தில் 103 பேரும் கிளிநொச்சியில் 284 பேரும் முல்லைத்தீவில் 163பேரும் துணுக்காயில் 40 பேரும், மன்னாரி ல் 93 பேரும் மடுவில் 36 பேரும் வவுனியா மேற்கில் 190 பேரும் வவுனியா வடக்கில் 39 பேரும் விடுபட்டவர்கள் 50 பேருமாக மொத்தமாக 1393 தொண்டர் ஆசிரியர்கள் வடக்கில் பணியாற்றுகின்றனர்.
அதேபோல் 443 தொண்டர் ஆசிரியர்கள் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் கிழக்கில் பணியாற்றி வருகின்றனர். இத்தொண்டர் ஆசிரியர்களுக்கான நிரந்தர நியமனங்கள் தொடர்பில் அரசாங்கம் பல்வேறு உறுதி மொழிகளை வழங்கினாலும் இது வரை அவை நிறைவேற்றப்படவில்லை. இவ்விடயத்தை கவனத்திற் கொண்டு வடக்கு கிழக்கு தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதற்கு கல்வி அமைச்சரும் அரசாங்கமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று பாராளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.