வடக்கு கிழக்கு பட்டதாரிகள் வேலைவாய்ப்பு தொடர்பில் எதிர்வரும் ஜூலை மாதம் விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வௌியிடவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி வடக்கு பட்டதாரிகளை நேரில் சந்தித்து உரையாடியதையடுத்தே இதனை தெரிவித்துள்ளார்.
கடந்த 12ம் திகதி மாலை 4.30 மணியளவில் வட மாகாண ஆளுநர் அலுவலகத்தில் வடக்கு பட்டதாரிகளின் பிரதிநிதிகளுடன் இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதியை சந்தித்த வடக்கு பட்டதாரிகள் சமூக பிரதிநிதிகள் வேலையற்றிருக்கும் 3500 பட்டதாரிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் அவர்களுடைய கோரிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதியிடம் எடுத்தியம்பினர். தொடர்ந்து கோரிக்கைகள் அடங்கிய மகஜரையும் கையளித்தனர்.
இதனையடுத்து ஜனாதிபதி எதிர்வரும் ஜூலை மாதம் வடக்கு கிழக்கு பட்டதாரிகளின் வேலைவாய்ப்பு தொடர்பில் விசேட வர்த்தமானி அறிவித்தலை வௌியிடவுள்ளதாகவும் அதற்கான முன்னேற்பாடுகள் தற்போது இடம்பெற்று வருவதாகவும் உறுதியளித்தார்.
ஜனாதிபதியின் வாக்குறுதியை வரவேற்றுள்ள பட்டதாரிகள் ஜனாதிபதியின் கூறியதற்கமைவாக ஆயிரம் பட்டதாரிகளுக்கு முதற்கட்டமாக தொழில்வாய்ப்பை வழங்குவது தொடர்பில் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அவ்வாறு உறுதிப்படுத்தப்பட்டால் காலவரையற்ற சத்தியாக்கிரக போராட்டத்தை தாம் கைவிடுவதாகவும் நேற்று (13) ஆணித்தரமாக தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.