
வட மாகாணத்தில் உள்ள பட்டதாரிகள் 194 பேருக்கு ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வு நேற்று (05) மாகாண கல்வியமைச்சர் கலாநிதி சர்வவேஸ்வரன் தலைமையில் யாழ் பொது நூலகத்தில் நடைபெற்றது.
வேலையற்ற பட்டதாரிகள் தமக்கு அரச நியமனம் வழங்குமாறு பல்வேறு ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு வரும் நிலையில் அவர்களுக்கு ஆசிரியர் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் நியமனங்கள் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதன் ஒரு கட்டமாகவே இவ்வாசிரியர் நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இந்நியமனம் வழங்கும் நிகழ்வில் பிரதம விருந்தினராக வட மாகாண முதலமைச்சர் சீ. வீ. விக்னேஸ்வரன் கலந்துகொண்டிருந்ததுடன் மாகாண அவைத்தலைவர் சிவஞானம், மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் கல்வியமைச்சின் உயரதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.