வட மத்திய மாகாண பாடசாலைகளில் கடமையாற்றும் நூறுக்கும் அதிகமான அதிபர்களை அவசரமாக இடமாற்றம் செய்துள்ளமையை கடுமையாக எதிர்பதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பிரியந்த பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.
ஏற்றுக்கொள்ளத்தக்க காரணங்கள் எதுவும் இன்றி அரசியல் காரணங்களுக்காக அதிபர்களை இடமாற்றம் செய்துள்ளதாக அநுராதபுரத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் ஆசிரியர் சங்கத் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறு இடமாற்றம் பெற்றுள்ள அதிபர்கள் அதனை நிராகரித்து முறைபாடு செய்துள்ளனர். மாகாண கல்விச் செயலாளர், மாகாண கல்விப்பணிப்பாளர், வலய பணிப்பாளர்கள் மற்றும் ஆசிரியர் சங்க குழுவினர் உள்ளடக்கி இடமாற்றம் வழங்குவதே சாதாரண முறையாகும். ஆனால் தரம் பெற்ற அதிபர்கள் சிலரை சிறிய பாடசாலைகளுக்கும் சில அதிபர்கள் பிரதி அதிபர்களாகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மூன்று வருடத்திற்கும் குறைவாக சேவையில் உள்ளவர்கள் இவ்வாறு இடமாற்றம் செய்வது சட்டவிரோதமானது.
இதற்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவிற்கு செல்ல முடியும். அது எவ்வாறு இருப்பினும் இவ்விடமாற்றங்கள் உடனடியாக நிறுத்தப்பட்டு முறையான விதத்தில் இடமாற்றம் வழங்கப்படவேண்டும் என எமது சங்கம் ஆணைக்குழுவிடம் கோரியுள்ளது. அவ்வாறின்றேல் இச்செயலுக்கு எதிராக பாரிய சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆசிரியர் சங்கத் தலைவர் எச்சரித்துள்ளார்.