வட மாகாண ஆசிரியர் அதிபர்களுக்கு வழங்க வேண்டிய சம்பள நிலுவைகள் உரிய காலத்தில் வழங்கப்படாத நிலையில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடப்போவதாக தமிழர் ஆசிரியர் சங்கம் எச்சரித்துள்ளது.
இலட்சக் கணக்கான சம்பள நிலுவைகள் வடக்கு மாகாண அதிபர் ஆசிரியர்களுக்கு வழங்கவேண்டியுள்ளது என்று சுட்டிக்காட்டியுள்ள தமிழர் ஆசிரியர் சங்கம் உடனடியாக அச்சம்பள நிலுவைகள் வழங்கப்படாவிடின் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாகவும் எச்சரித்துள்ளது.
இது தொடர்பில் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சரா. புவனேஷ்வரன் ஊடகங்களுக்கு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
வட மாகாண அதிபர், ஆசிரியர்களுக்கு வழங்கவேண்டிய இலட்சக்கணக்கான சம்பள நிலுவையை உடனடியாக வழங்குமாறு வட மாகாண கல்வியமைச்சு, கல்வித் திணைக்களம் என்பவற்றுக்கு தெரியப்படுத்தியும் இன்னமும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அமைச்சு மற்றும் திணைக்களங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு எவ்வித நிலுவையும் இல்லை. அதிபர், ஆசிரியர்களுக்கு வழங்குவதற்கு மாத்திரம் பணம் இல்லையென்று காரணம் காட்டப்படுகிறது.
இது இவ்வாறிருக்க, கல்வித் திணைக்களத்திடம் இடர் உதவிக் கடன் பெற்றவர்களிடம் வட்டியுடன் கடன் அறவிடப்படுகிறது. இவ்விடயம் தொடர்பில் எவரும் கரிசனைக்கொள்ளவில்லை. ஆனால் ஞாயிற்றுக்கிழமைகளிலும் பொது விடுமுறை நாட்களிலும் பாடசாலை நடத்துமாறு ஆசிரியர்களுக்கு திணைக்கள தலைவர்கள் பணிக்கின்றனர். இது வேதனைக்குரிய விடயமாகும்.
ஒழுங்கான முறையில் ஊதியம் செலுத்தப்படாவிட்டால் மாற்றத்தைக் காண முடியாது. எனவே அதிபர் ஆசிரியர்களுக்கு வழங்கவேண்டிய நிலுவையை உடனடியாக வழங்க தவறினால் பணிப்புறக்கணிப்பை மேற்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.