வடக்கு மாகாணத்தில் எதிர்வரும் முதலாம் திகதி வழங்கப்படவிருந்த பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் இதற்கான அறிவிப்பை விடுத்துள்ளார்.
வடக்கு மாகாண சபையில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற அமர்வில் எதிர்வரும் முதலாம் திகதி வழங்கப்படவுள்ள பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் தொடர்பாக ஆராயப்பட்டது.
வடக்கு மாகாணத்தில் நிலவும் 849 ஆசிரியர் வெற்றிடங்களுக்கு நடத்தப்பட்ட போட்டிப் பரீட்சையில் 779 பேர் சித்தியடைந்துள்ளனர் என்றும், பாட ரீதியிலான வகையில் 559 பேருக்கே நியமனம் வழங்கப்படவுள்ளது என்றும் அவைத் தலைவரும் சக உறுப்பினர்களும் சபையில் தெரிவித்தனர்.
இதன்மூலம் மூலம் பரீட்சையில் சித்தியடைந்த 220 பேருக்கு நியமனங்கள் கிடைக்காது. புவியியல் போன்ற சில பாடங்களுக்கான வெற்றிடங்களுக்கு மேலதிகமானோர் சித்தியடைந்துள்ளனர். சில பாடங்களுக்கான வெற்றிடங்கள் நிரப்பப்படாது போகும் சூழ்நிலையும் காணப்படுகின்றது.
எனவே, போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்த சிலருக்கு நியமனம் வழங்கிச் சிலருக்கு வழங்காமலிருப்பது பாகுபாடாக அமையலாம். முழுமையான வெற்றிடங்களைக் கூடுதலான வரை நிரப்பிச் சித்தியடைந்த எல்லோருக்கும் நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவைத் தலைவரால் சபையில் வலியுறுத்தப்பட்டது. அதனை சபை உறுப்பினர்களும் ஏற்றுக்கொண்டனர்.
இந்த நிலையில், எதிர்வரும் 28 ஆம் திகதி இடம்பெறவுள்ள கல்வி அமைச்சுடனான ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் எடுக்கும் வரை இந்த நியமனத்தைத் தற்காலிகமாக இடைநிறுத்துவதாக அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானத்தால் சபைக்கு அறிவிக்கப்பட்டது.