வனஜீவராசிகள் திணைக்கள பெண் அதிகாரி தொடர்பில் அரசின் கருத்து

சட்டத்துக்கு அமைவாக செயற்படும் வனஜீவராசிகள் திணைக்கள பெண் அதிகாரியின் பக்கமே ஜனாதிபதியும் பிரதமரும் அமைச்சரவையும் நிற்குமென அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

நீர்கொழும்பு பிரதேசத்திலுள்ள வனஜீவராசிகள் திணைக்கள காணியை விளையாட்டு மைதானம் அமைப்பதற்கான முயற்சிக்கு எதிராக இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் முன்னிலையில் உறுதிபட பேசிய வனஜீவராசி அதிகாரி தொடர்பாக அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளிக்கையிலே அமைச்சர் பந்துல குணவர்தன இவ்வாறு கூறினார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது.

இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர், நீதியை நிலைநாட்டுகின்ற அரச ஊழியர்களை பாதுகாப்பத்தில் அரசாங்கம் முன்னிற்கும். அதுவே அரசாங்கத்தின் கடமை. கடந்த ஆட்சியை போலன்றி நாம் அரச அதிகாரிகளை பாதுகாப்போம். அவர்களுக்கு சுதந்திரமாக செயற்பட இடமளிக்கப்பட்டுள்ளது.

வனஜீவராசி அதிகாரி, யாருடைய பேச்சை கேட்க வேண்டுமென இதன்போது எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர் ,அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சின் செயலாளரின் பேச்சிற்கே கட்டுப்பட வேண்டும்.

கடந்த திங்கட்கிழமை நீர்கொழும்பு களப்பு அபிவிருத்தி தொடர்பில், வனஜீவராசிகள் திணைக்கள கம்பஹா அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், வனஜீவராசிகள் திணைக்கள பெண் அதிகாரி ஒருவருக்கும், இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் பிரதேசவாசிகளுக்குமிடையில் ஏற்பட்ட விவாதம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பகிரப்பட்டு வருகின்றது.

இதில் கம்பஹா மாவட்ட வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரி தேவானி ஜயதிலக, தான் சட்டத்திற்கு அப்பாற்பட்டு செயற்படமாட்டேன் என, இராஜாங்க அமைச்சரிடமும் பிரதேசவாசிகளிடமும் ஆணித்தரமாக தெரிவித்துள்ளார்.

வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு சொந்தமான சதுப்பு நிலத்தை விளையாட்டு மைதானம் அமைக்க பயன்படுத்துவதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்ததோடு சட்டத்திற்கு மாற்றமாக எதுவும் செய்ய முடியாது என்றும் உறுதிபட கூறியிருந்தார்.

மீனவர்களுடன் மோதிக் கொள்ளாமல் சுமுகமாக இப் பிரச்சினையை தீர்க்குமாறு இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்த கோரியிருந்ததோடு சட்டத்திற்கு முரணாக தான் செயற்பட போவதில்லையெனவும் அதற்கு உட்பட்டு செயற்படத் தயார் எனவும் அந்த அதிகாரி கூறியிருந்தார்.

இந்த அதிகாரிக்கு எதிராக அங்கிருந்த சிலர் கோஷம் எழுப்பியிருந்தனர். ஆனால் சமூக வலைத்தளங்களில் வனஜீவராசி அதிகாரிக்கு ஆதரவாகவே பலரும் கருத்து வெளியிட்டிருந்ததோடு வனஜீவராசிகள் அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேனவும் அதிகாரிக்கு ஆதரவாகவே கருத்து தெரிவித்திருந்தார்.

நன்றி : தினகரன்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435