வட மாகாணத்தில் தொழில்கோரும் பட்டதாரிகளுள், 35 வயதிற்கு மேற்பட்ட பட்டதாரிகள் வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே மற்றம் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோரிடம் மகஜர்களைக் கையளித்துள்ளனர்.
நேற்று (09) யாழ்ப்பாணத்திலுள்ள வடமாகாண ஆளுநர் செயலகத்தில் வைத்து அவர்கள் இந்த மகஜரைக் கையளித்துள்ளனர்.
தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் அபிவிருத்தி உத்தியோகத்தர் வெற்றிடத்தினை நிரப்புவதற்காக அரச வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ள 35 வயது வயதெல்லையை 45 ஆக அதிகரிக்க வேண்டும் என அந்த மகஜர் ஊடாக அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அந்த மகஜரைப் பெற்றுக்கொண்ட ஆளுநர், உரிய அமைச்சின் கவனத்திற்கு இந்த விடயத்தைக் கொண்டு சென்று தீர்வு பெற்றுத் தருவதாக உறுதியளித்துள்ளார்.
இதையடுத்து, வட மாகாண முதலமைச்சரிடமும் அந்த மகஜரை அவர்கள் கையளித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் கைதடியிலுள்ள வடமாகாண முதலமைச்சரின் அலுவலகத்திற்குச் சென்ற தொழில்கோரும் பட்டதாரிகளின் பிரதிதிகள் வடமாகாண முதலமைச்சரின் பிரத்தியேக செயலாளர் எஸ். இராஜதுரையிடம் அந்த மகஜரைக் கையளித்துள்ளனர்.
இந்த மகஜர்கள் கையளிக்கப்பட்டதன் பின்னர் கருத்து வெளியிட்ட தொழில்கோரும் பட்டதாரிகளின் பிரதிநிதிகள்,
தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் அபிவிருத்தி உத்தியோகத்தர் வெற்றிடத்தினை நிரப்புவதற்கான அரச வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
அந்த வர்த்தமானியில் குறித்த நியமனத்திற்கான வயதெல்லை 35 ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால், 35 வயதிற்கும் மேற்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் வட மாகாணத்திலுள்ளனர்.
எமது தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தின் கோரிக்கைக்கு அமைவாக கோரப்பட்டுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர் வெற்றிடத்துக்கான வயதெல்லையை 45 வயதாக அதிகரிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து, வடமாகாண ஆளுநர், வடமாகாண முதலமைச்சர் ஆகியோரிடம் மகஜர்களை கையளித்தாக தெரிவித்தனர்.
இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் அரச சேவைக்கு ஆட்சேர்ப்புக்கான வயதெல்லை 35 லிருந்து 45 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சரின் ஊடகப் பிரிவு நேற்று அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.