எதிர்வரும் 2020ம் ஆண்டில் பல்வேறு திறமையுள்ள விசேட திறமையுடையவர்களின் வேலைவாய்ப்பு வீதத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வட மாகாண ஆளுநர் சுரேஷ் ராகவன் தெரிவித்துள்ளார்.
“எம்மத்தியில் வாழும் விசேட தேவையுடையவர்களின் பிரச்சினைகளும் வாய்ப்புக்களும்” என்ற தலைப்பில் யாழ் பொதுநூலக கேட்போர்கூடத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் ஆளுநர் இதனை தெரிவித்துள்ளார்.
இதன்போது விசேட தேவைக்குரிய நபர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் சமூக சேவைத் திணைக்களத்தின் பணிப்பாளர் விளக்கமளித்தார். விசேட தேவைக்குரிய நபர்கள் எதிர்நோக்கும் சவால்கள், தேவைகள் தொடர்பில் கவனம் செலுத்திய ஆளுநர், விசேட தேவையுடையவர்களின் தேவைகளை கண்டறிந்து அதற்கு அவசியமான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான ஆலோசனையை வழங்குமாறு தெரிவித்தார்.
மேலும் தற்போது 3 வீதமாக உள்ள விசேட தேவையுடைவர்களுக்கான தொழில்வாய்ப்பை 6 வீதமாக அதிகரிக்க தாம் எதிர்பார்த்துள்ளதாகவும் அவர்களுக்கான போக்குவரத்து வசதிகளை அதிகரிக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.