வேலையற்ற பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட பட்டதாரிகள் மேன்முறையீடு செய்தவற்கான வாய்ப்பு வழங்கியுள்ளதாக அரச சேவை, உள்ளூராட்சி மற்றும் மாகாணசபைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
ஊழியர் சேமலாப நிதியத்தில் அங்கத்துவம் பெற்றிருத்தல், தொழில் வாய்ப்பை பெற்றிருத்தல் போன்ற காரணங்கள் நிராகரிப்பதற்கான காரணம் என குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்பதாரிகள் இவ்வாறு மேன்முறையீடு செய்ய முடியும் என அமைச்சின் செயலாளர் ஜே. ஜே. ரத்னசிறி தெரிவித்தார்.
அமைச்சின் உத்தியோகப்பூர்வ இணையதளமான www.pubad.gov.lk என்ற இணையதளத்தில் வௌியிடப்பட்டுள்ள விளம்பரத்திற்கமைய, தமது மேன்முறையீட்டு விண்ணப்பப்படிவத்தை தயாரித்து, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 15ம் திகதிக்கு முன்பதாக தமது பிரதேசத்தின் பிரதேச செயலகத்தில் கையளிக்குமாறு அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
கையளிக்கப்பட்ட மேன்முறையீட்டுக் காரணங்களை கவனத்திற்கொண்டு தகமைவாய்ந்த பட்டதாரிகள் பயிலுநர்களாக இணைத்துக்கொள்ளப்படுவார்கள் என்றும் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.