இலங்கை தேசிய மருத்துவமனையில் கொவிட்-19 சோதனை ஆய்வகம் ஒன்றை நிறுவுவதை வேண்டுமென்றே தவிர்ப்பது தொடர்பாக அரச மருத்துவ ஆய்வக நிபுணர்கள் சங்கம் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அந்தக் கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.
அந்தக் கடிதத்ததில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இலங்கை தேசிய மருத்துவமனையின் தலைமை நுண்ணுயிரியலாளர், தங்களுக்கு அவசியமான நிறுவனத்தின் பெயரில் உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கு விடுத்துள்ள அழுத்தம் குறித்து முறையான விசாரணை மேற்கொள்ளுமாறு கோருகின்றோம். இயந்திரங்களின் நிலை குறித்து தனிப்பட்ட கருத்துக்களைக் கொண்டு ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சிறப்பு மருத்துவர்களின் தேவைக்கேற்ப கொரோனா சோதனை பொறிமுறையை ஒரு தனியார் செயற்பாடாக மாற்றுவதும் பாரிய தவறு.
இலங்கையின் தேசிய மருத்துவமனைக்கு ஒரு கொரோனா பரிசோதனை ஆய்வகம் தேவைப்படுகிறது, ஆனால் மருத்துவமனையில் நிறுவ உத்தரவிடப்பட்ட இரண்டு மூலக்கூறு ஆய்வகங்கள் பல்வேறு குறைபாடுகளால் தொடர்ந்து தாமதமாகி வருவதை நாம் அவதானிக்கின்றோம். Gateway Iinternational School நிறுவனம் ஊடாக, மருத்துவமனையில் பல சிறப்பு மருத்துவர்களின் ஈடுபாட்டுடன், ஜேர்மனியில் தயாரிக்கப்பட்ட அதிநவீன பி.சி.ஆர் சோதனை இயந்திரத்தை நன்கொடையாக வழங்க திட்டமிட்டிருந்தது.
இருப்பினும், இலங்கை தேசிய மருத்துவமனையின் தலைமை நுண்ணுயிரியலாளர் பி.சி.ஆர் இயந்திரம் மற்றும் தொடர்புடைய தயாரிப்புகளை நன்கொடையாக வழங்குவதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தார். இதன் காரணமாக அந்த பி.சி.ஆர் இயந்திரம் ஸ்ரீஜயவர்னபுர பல்கலைக்கழக இரசாயண ஆய்வுகூடத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்டது.
கொவிட் 19 ஐ பரிசோதிப்பதற்காக இலங்கை தேசிய மருத்துவமனையில் ஒரு ஆய்வகத்தை நிறுவுவது நீண்ட காலமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு இரண்டு சுகாதார இடங்களை அடையாளம் காணவும், இதுபோன்ற ஆய்வகங்களை அமைக்கவும் முன்னாள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இலங்கையின் தேசிய மருத்துவமனையின் தலைமை நுண்ணுயிரியலாளர் திருமதி கீதிகா படபெதிக்கு ஒரு ஆய்வகத்தை நிறுவும் பொறுப்பு வழங்கப்பட்டது. மற்ற ஆய்வகத்தின் செயல்பாட்டிற்கு உயிரியல் வேதியியலாளர் வைத்தியர் கயா கட்டுலந்தவுக்கு பொறுப்பளிக்கப்பட்டது.
எவ்வாறாயினும், அந்த ஆய்வகத்தின் ஸ்தாபனம் மிகவும் மெதுவாக இருந்ததுடன், வெளிப்புற எதிர்ப்புக்களைத் தணிக்கும் வகையிலும் நடவடிக்கைகள் இடம்பெற்றதை எம்மால் அவதானிக்க முடிந்தது. அது தொடர்பான கலந்துரையாடல்களில் தொழில் வல்லுநர்கள் அல்லது ஆர்வமுள்ள குழுக்களை ஈடுபடுத்த விரும்பாதிருந்திருந்தமையும் அவதானிக்க முடிந்தது.
முதல் கொரோனா அலையின் முடிவில், “கொரோனா முடிவு” என்ற கருத்தின் கீழ் ஆய்வகத்தை நிறுவுவதை கைவிடுவதற்கு திட்டமிடப்பட்டதாகவும் எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. இந்த பொறுப்பற்ற நடத்தையின் விளைவாக, தேசிய மருத்துவமனையின் ஊழியர்களாகிய நாங்கள் தேசிய சுகாதார அமைப்பு சார்பாக எங்கள் கடமையை புறக்கணித்துள்ளோம். மேலும் ஒரு நோயாளி அல்லது தேசிய மருத்துவமனையின் ஊழியர்கள் மீது குறைந்தபட்சம் ஒரு பி.சி.ஆர் பரிசோதனையாவது செய்ய மற்ற நிறுவனங்களை நம்பவேண்டி இருந்தது. இந்த பி.சி.ஆர் சிக்கல் மிகவும் கடுமையானது என்பதை நாங்கள் சுட்டிக்காட்டுகிறோம், ஏனெனில் கொரோனா அல்லாத நோயாளர்கள் பாரிய அபாய நிலையை எதிர்நோக்கியுள்ளனர். – என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.