வரவுசெலவு முன்மொழிவு 2021இல் ஆசிரியர் வேதன முரண்பாடுகளை நீக்குவதற்கான முன்மொழிவுகள் வழங்கப்படாவிடின் கடும் தொழிற்சங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை ஆசிரியர்கள் சங்கத்தின் பிரதான செயலாளர் ஷெஹான் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், ஆசிரியர் வேதன முரண்பாடுகளை முதலாவது வரவுசெலவில் தீர்ப்பதாக தற்போதைய அரசாங்கம் தெரிவித்திருந்தபோதிலும் அவ்வாறு நடக்கவில்லை. அதேபோல் இம்முறை வரவுசெலவிலும் நடைபெற்றால் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளோம்.
அடுத்த வருடம் முதல் அனைத்து பாடசாலைகளிலும் கைவிரல் அடையாள கருவியை பொருத்தப்படவுள்ளது. ஆசிரியர்கள் உரிய நேரத்திற்கு பாடசாலைகளுக்கு வருகைத் தருகின்றனர். தூர பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளுக்கு செல்வதற்குள்ள போக்குவரத்து சிக்கல்களால் சிலர் மட்டுமே தாமதாக சேவைக்கு செல்கின்றனர்.
கையடையாக இயந்திரம் பொருத்தப்படுவதனூடாக ஆசிரியர்கள் 1.30 மணிக்கு பாடசாலையை விட்டு வௌியேற வேண்டும். இது மாணவர்களின் கல்விச் செயற்பாடுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
பெரும்பாலான ஆசிரியர்கள் பாடசாலை நிறைவுற்ற பின்னர் மேலதிக வகுப்புகளை இலவசமாக நடத்துகின்றனர். எனவே இயந்திரம் பொருத்தும் தீர்மானத்தை மாற்ற வேண்டும் என்று நாம் நினைக்கிறோம். மாற்றப்படாவிடின் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு தாக்கம் ஏற்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.