வடமேல் மாகாண பட்டதாரிகளுக்கு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் ஆசிரியர் நியமனம் வழங்கப்படவுள்ளதாக மாகாண முதலமைச்சர் தர்மசிறி தசநாயக்க தெரிவித்துள்ளார்.
அடுத்த மாதம் மாகாணசபை கலைக்கப்படவுள்ளதால் அதற்கு முன்னர் இந்நியமனங்கள் வழங்கி முடிப்பதற்கான துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
வடமேல் மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்க பிரதிநிதிகள் முதலமைச்சரை அண்மையில் முதலமைச்சர் அலுவலகத்தில் சந்தித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே ஒரு தொகுதி வேலையற்ற பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ள நிலையில் ஏனையோருக்கு நியமனங்கள் வழங்குவதற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் வாரங்களில் கோரப்படும் என்றும் வடமேல் மாகாணத்தில் மூன்று மாவட்டங்களில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவியபோதும் புத்தளம் மாவட்டத்தில் அதிக பற்றாக்குறை நிலவுவதாகவும் இதன்போது முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அதிகமாக கணிதம் மற்றும் விஞ்ஞானம் ஆகிய பாடங்களுக்கு பற்றாக்குறை நிலவியபோதிலும் ஏனைய பாடங்களுக்கும் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகின்றன. மத்திய அரசின் அனுமதியுடன் அடுத்த மாத நடுப்பகுதிக்குள் நியமனங்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்படும் என்றும் முலமைச்சர் உறுதியளித்துள்ளார்.