கிழக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகளுக்கு நடத்தப்படவுள்ள போட்டிப்பரீட்சையில் கணக்கியல் பட்டதாரிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர் என்றும் இதனால் போட்டிப்பரீட்சையை புறக்கணிக்கப்போவதாகவும் வர்த்தக பட்டதாரிகள் அறிவித்துள்ளனர்.
போட்டிப்பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் கணக்கியல் பட்டதாரிகளுக்கு மட்டும் அனுப்பப்படாமையினால் அவர்கள் புறக்கணிக்கபட்டுள்ளார்கள் என்று கூறியே வர்த்தக பட்டதாரிகள் போட்டிப்பரீட்சையை புறக்கணிக்க தீர்மானித்துள்ளனர்.
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி நடத்தப்படவுள்ள போட்டிப்பரீட்சைக்கான அனுமதிப்பத்திரங்கள் ஏற்கனவே அனுப்பிவைக்கப்பட்டுள்ளன என்று மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எனினும் வர்த்தக, கணக்கியல் பட்டதாரிகளுக்கு அனுமதிஅட்டைகள் அனுப்பப்படவில்லை என்று இப்பட்டதாரிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.
உயர்தேசிய கணக்கியல் டிப்ளோமா வர்த்தக பட்டதாரிகள் சுமார் 500 பேர் கிழக்கு மாகாணத்தில் உள்ளனர் என்றும் கடந்த காலங்களில் அரச நியமனம் கோரி நடத்தப்பட்ட நீண்ட நாள் போராட்டத்தில் இப்பட்டதாரிகள் முழுமையான பங்களிப்பை வழங்கியிருந்தனர் என்றும் எனினும் இவர்கள் ஒருவருக்கும் போட்டிப்பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் இதுவரை கிடைக்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இவ்விடயம் தொடர்பில் கிழக்கு மாகாண முதலமைச்சர் உட்பட உரிய அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என்று இப்பட்டதாரிகள் கோரியுள்ளனர்.
இவ்விடயத்திற்கான தீர்வு கோரி இன்னும் சில தினங்களில் மீண்டும் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட பட்டதாரிகள் கூறியுள்ளனர்.