அரச தொழில்வாய்ப்புக்காக விண்ணப்பித்துள்ள அனைத்து வேலையில்லாப் பட்டதாரிகளுக்கான நியமனங்கள் இன்று வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
ஒருவருட பயிற்சிக் காலத்தின் அடிப்படையில் அரச சேவைக்கு இணைத்துக்கொள்ளப்படும் இவர்களுக்கு 20,000 ரூபா பயிற்சிக்கால சம்பளமாக வழங்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.
அவர் மேலும் கூறுகையில்,
நாட்டில் 50,000 வரையான பட்டதாரிகள் வேலைவாய்ப்பற்றிருந்தனர். இவர்கள் அனைவருக்கும் தொழில் வாய்ப்புகளை வழங்குவதே அரசாங்கத்தின் கொள்கையாக காணப்பட்டது. அதன்படி அனைவரிடமும் விண்ணப்பங்கள் கோரப்பட்டன.
அரச தொழில்வாய்ப்புகளுக்காக விண்ணப்பித்த அனைத்து வேலையில்லாப் பட்டதாரிகளுக்கும் இன்று நியமனம் வழங்கப்படவுள்ளது. மார்ச் முதலாம் திகதி முதல் அரச சேவையில் இணைத்துக்கொள்ளும் வகையிலேயே நியமனம் வழங்கப்படுகிறது.
ஒருவருடகாலம் இவர்களுக்கு பயிற்சிக் காலமாகும். இக் காலப்பகுதியில் 20,000 ரூபா சம்பளமாக வழங்கப்படும். அதன் பின்னர் அவர்கள் முறையான அரச சம்பளப் பட்டியலுக்குள் உள்வாங்கப்படுவார்கள்.
நியமனம் பெறும் இடத்தில் கட்டாயம் ஐந்து ஆண்டுகள் பணிபுரிய வேண்டும். அதன் பின்னரே இடமாற்றத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். அரச சேவையை வறுமையான பிரதேசங்களுக்கு கொண்டுசெல்லும் நோக்கில் இவர்களுக்கான நியமனம் வழங்கப்படவுள்ளது என்றார்.
மூலம் – தினகரன்