வேலையில்லா பட்டதாரிகளுக்கு 3 மாத தலைமைத்துவப் பயிற்சி வழங்க தீர்மானித்துள்ளதாக பொது சேவைகள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஜே. ஜே. ரட்ணசிறி தெரிவித்துள்ளார்.
டெய்லி எப்.டி இணையதளத்திற்கு நேற்று (26) வழங்கிய செவ்வியொன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் செவ்வியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது. பட்டதாரிகளுக்கு தன்னம்பிக்கையை மேம்படுத்தவும் பொதுத்துறைப் பணியை மேற்கொள்வதற்கான திறமையை அதிகரிக்கச் செய்யும் வகையில் இப்பயிற்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. புதிதாக பணியில் இணைத்துக்கொள்பவர்களுக்கும் இப்பயிற்சி வழங்கப்படவுள்ளது. சூழ்நிழலைகளுக்கு ஏற்றாற் போல சரியான தீர்மானங்களை எடுக்கும் வகையில் அவர்களை சிந்திக்கத் தூண்டுவதும் இப்பயிற்சியின் நோக்கமாகும்.
புதிதாக சேவையில் இணைத்துக்கொள்ளப்படும் அனைவருக்கும் இத்தலைமைத்துவப் பயிற்சி வழங்கப்படும். பயிற்சியின் பின்னர் அவர்கள் தனியார் நிறுவனங்கள் உட்பட பல நிறுவனங்களுக்கு அனுப்பப்படுவார்கள். இச்சந்தர்ப்பமானது அவர்களுடைய தலைமைத்துவம், திறமை என்பவற்றை மேலும் வளர்ப்பதுடன் வினைதிதிறன் மிக்க சேவையை நாட்டுக்கு வழங்க உதவியாக இருக்கும்.
இராணுவ வசதிகளுடன் தலைமைத்துவ பயிற்சி வழங்கப்படும். இராணுவத்தில் அதிக எண்ணிக்கையான பட்டதாரிகளுக்கு ஒரே தடவையில் பயிற்சிகள் வழங்கும் வசதிகள் இருப்பதனால் அங்கு பயிற்சிகள் வழங்க தீர்மானிக்கப்பட்டது. அந்தந்த பிரதேச செயலகங்களுக்கு நியமனக் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. செப்டெம்பர் மாதம் 2ம் திகதி பிரதேச செயலகத்திற்கு சமூகமளிக்கும் போது நியமனக் கடிதங்களை அவர்கள் பெற்றுக்கொள்ள முடியும்.
நியமனக் கடிதங்கள் வழங்குவதற்கான விழா ஏற்பாடு செய்யப்படவில்லை. மிக எளிமையான முறையில் நியமனக் கடிதங்கள் வழங்கப்படும். அரச நிதியை விரயமாவதை இது தடுக்கும் வகையில் இதனை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிமுகப்படுத்தியுள்ளார்.
இத்திட்டத்தின் கீழ் 60,000 வேலையில்லா பட்டதாரிகள் தொழில்வாய்ப்பை பெறுவார்கள். இவர்களுக்கு வழங்கப்படும் ஒரு வருட கால பயிற்சியில் தலைமைத்துவப் பண்புகள், இலக்குகளை அடைதல், தன்னம்பிக்கையை கட்டியெழுப்பதல் என்பவற்றுக்கு முக்கியத்துவம் வழங்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
புதிய அமைச்சுக்களின் இலக்குகளை அடைவதற்கு பட்டதாரிகளின் பங்களிப்பை பெறுவதே இந்நியமனம் வழங்கலின் பிரதான நோக்கம் என்றும் அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.