பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிர்வரும் மே மாதம் முதல் ஒரு வருடத்திற்கு மாத்திரம் 50 ரூபா மேலதிக கொடுப்பனவு வழங்க எதிர்பார்ப்பதாக பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் அடுத்தவாரம் அமைச்சரவையில் முன்வைக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறிருப்பினும், ஒரு வருடத்தின் பின்னர், இது குறித்த மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என நாடாளுமன்றத்தில் நேற்று (10) பிற்பகல் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அமைச்சர் நவீன் திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
தொழிலாளர்களின் வேதன முறைமை குறித்து புதிதாக சிந்திக்க வேண்டியுள்ளது. நாடாளுமன்ற குழு ஒன்றை அமைத்தாவது இது தொடர்பில் ஆராய வேண்டியுள்ளதாக அமைச்சர் நவீன் திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஆரம்பகாலத்தில் பெருந்தோட்டங்களிலிருந்து கிடைத்த உற்பத்தி தற்போது குறைவடைந்துள்ளது.
100க்கு 73 சதவீதமான தேயிலை உற்பத்தி சிறுதோட்ட உரிமையாளர்களிடமிருந்து தற்போது கிடைக்கப்பெறுகிறது.
15 வருடங்களுக்கு முன்னர் பெருந்தோட்டங்களில் 2 இலட்சத்து 40,000 தொழிலாளர்கள் இருந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 40,000ஆக குறைவடைந்துள்ளது.
இன்னும் 10 ஆண்டுகளில் தொழிலார்களின் எண்ணிக்கை 50,000ஆக குறைவடையக்கூடும்.
இவ்வாறாக பெருந்தோட்டங்களைப் பொறுத்தவரையில், உற்பத்தி வீpழ்ச்சியடைவதுடன், தொழிலாளர்களின் எண்ணிக்கையும் குறைவடைந்து வருவதாக அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
மலையகத்தில் உள்ள இளைஞர் யுவதிகள், பெருந்தோட்டங்களில் தொழில்புரிய விருப்பமின்றி, கொழும்பில் வந்து பணியாற்றுகின்றனர்.
இந்த நிலையில், பெருந்தோட்டத் துறையின் முக்கியத்துவத்தை அவர்களுக்கு தெளிவுபடுத்தி, அவர்களின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதற்கமைய, தற்போது வெளி ஆள் உற்பத்தி முறைமையை தாம் முன்மொழிவதாகவும், தோட்ட நிறுவனங்களும் இந்த முறைமையில் விரும்பம் கொண்டுள்ளதாகவும் அமைச்சர் நவீன் திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறிருப்பினும், அந்த வெளிஆள் உற்பத்தி முறைமை எவ்வாறானது என்பது குறித்து இன்னும் தோட்ட நிறுவனங்கள் இதுவரை தீர்மானத்திற்கு வரவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தோட்டத் தொழிலாளர்களுக்கு உரிமையுடன்கூடிய காணித் துண்டுகளை வழங்கி, அவர்களே தேயிலையை உற்பத்தி செய்து, நிறுவனங்களுக்கு வழங்குவது தொடர்பான சில முறைமைகள் குறித்து அனைத்து தொழிற்சங்கங்களுடனும், தோட்ட நிறுவனங்களுடனும் பேச்சுவார்த்தை நடத்த எதிர்பார்ப்பதாக அமைச்சர் நவீன் திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறிருப்பினும், இது இலகுவான விடயமல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.