புதிதாக நியமனம் வழங்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களின் திறமைகளுக்கேற்ப நியமனங்கள் வழங்கப்படுவது மிகவும் அவசியம் என்று நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திலகராஜா தெரிவித்துள்ளார்.
நுவரெலியா பிரதேச ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், புதிதாக நியமனம் வழங்கப்பட்ட பட்டதாரிகள் தரம் ஒன்று தொடக்கம் ஐந்து வரையான வகுப்புக்களுக்கு கற்பிப்பதற்கே பயன்படுத்தப்படுகின்றனர். இதனால் அப்பட்டதாரிகளின் திறமைகள் சரியான முறையில் பயன்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைக்காமல் போவதுடன் அவர்களின் திறமைகள் மழுங்கடிக்கப்படுகின்றன. இதனால் அப்பட்டதாரிகள் கடுமையான மனஉலைச்சலுக்கு ஆளாகின்றனர். இதனை கருத்திற்கொள்ள வேண்டும்.
அவரவர் திறமைகளை அடையாளங்கண்டு அவர்களை அதற்கேற்ப நியமனம் வழங்கப்படும்பட்சத்தில் அவர்களுடைய திறமை மேம்படுவதுடன் மாணவர்களும் பயன்பெற்றுக்கொள்வார்கள் என்று மேலும் தெரிவித்தார்.