1,000 ரூபா சம்பளம் தொடர்பில் நவீன் திஸாநாயக்க வெளியிட்டுள்ள கருத்து

“இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவராக நான் அதிகாரப்பூர்வமாக பதவியேற்ற பின்னர், அடுத்த கூட்டு ஒப்பந்தத்தில் ஆயிரம் ரூபாவை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பேன்.”

– இவ்வாறு முன்னாள் பெருத்தோட்டத்துறை அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நுவரெலியாவில் இன்று (20) மாலை ஐக்கிய தேசியக் கட்சியின் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தபோது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நவீன் திஸாநாயக்க இதன்போது  மேலும் கூறுகையில்,

நான் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிரானவன் அல்ல. 750 ரூபாவுக்கும் மேற்பட்ட தொகையொன்றை பெற்றுக்கொடுப்பதற்கே முயற்சித்தேன். கொடுப்பனவுகள்மூலம் ஆயிரம் ரூபாவை பெறுவதற்கான சூழ்நிலை அன்று இருந்தது. ஆனால், அந்த தொகையை அடைவதற்கான வழிமுறையை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் நிராகரித்தது.

திகாம்பரம் தரப்பினர் கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தையில் இல்லை. எனவே, வெளியில் இருந்துக்கொண்டு அவர்கள் எப்படியான கருத்துகளையும் வெளியிடமுடியும். வெளியில் இருந்து இவ்வாறு சேறுபூசலாம். ஆனால், உள்ளே இருந்து தக்க வைத்துக்கொள்வதுதான் கடினம்.

2016 ஆம் ஆண்டு தீபாவளி கொடுப்பனவை வழங்குமாறு கோரினார் (திகாம்பரம்). நான் 350 மில்லியன் ரூபாவை வழங்கினேன். இன்று அதனை மறந்துவிட்டனர்.

50 ரூபா கொடுப்பனவை வழங்குவதற்காக தேயிலை சபை ஊடாக 600 மில்லியன் ரூபாவை ஒதுக்க நடவடிக்கை எடுத்தேன். அதற்குள் சூழ்ச்சி செய்து மைத்திரிபால சிறிசேன ஆட்சியை கவிழ்த்துவிட்டார் – என்று கூறியுள்ளார்.

செய்தியாளர் – கிஷாந்தன்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435