பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா அடிப்படை சம்பள உயர்வு கிடைப்பது சாத்தியமில்லை என்றும், அது சம்பந்தப்பட்ட தரப்பினரின் ஏமாற்று வார்த்தையே என்றும் மலைநாட்டு புதிய கிராமங்கள் அடிப்படை வசதிகள் அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், நியாயமானதொரு சம்பள உயர்வைப் பெற்றுக்கொள்வதற்கு அனைவரும் இணைந்து போராட வேண்டும் என்றும் திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் தனது அமைச்சு அலுவலகத்தில் கடமைகளை பொறுப்பேற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் தெரிவித்துள்ள அவர்,
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் பொய் கூறுகின்றார். அவரின் கட்சியின் உபதலைவர் அருள்சாமி, தங்களின் போராட்டம் வெற்றிப் பெற்றுவிட்டதாக கூறுகிறார்.
பெருந்தோட்ட நிறுவனங்கள் 700 ரூபா வரை அடிப்படை சம்பளத்துக்கு வந்துவிட்டதாக அருள்சாமி கூறுகிறார். ஆனால் 600 ரூபாவுக்கு அடிப்படை சம்பளத்தை அதிகரிக்க முடியாது என முதலாளிமார் சம்மேளனத்தினர் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், கூட்டு ஒப்பந்தத்திலிருந்து அனைவரும் வெளியேற வேண்டும் என அமைச்சர் பழனி திகாம்பரம் கோரியுள்ளார்.
கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தரப்பினர் அதிலிருந்;து வெளியேறினால், பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு எதிராகவும், அரசாங்கத்திற்கு எதிராகவும் போராடி நியாயமான அடிப்படை சம்பளத்தை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பபோம் என்றும் அவர் கூறியுள்ளார்.