வற் வரியினை 11 வீதத்திலிருந்து 15 வீதமாக அதிகரிப்பதற்கான திருத்தச் சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் நேற்று (13) சமர்ப்பிக்க்பபட்ட சட்டமூலத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது..
அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்ததை அடுத்து அதிகரிப்பு சட்டமூலமானது வர்த்தமானியில் வெளியிடப்பவுள்ளதுடன் மாத இறுதியில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.
புதிய வற்வரி திருத்தச் சட்டமூலம் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளன.
இது தொடர்பான திருத்தத்தை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முன்வைத்ததாகவும் இதற்கு இரண்டு பிரதான கட்சிகளும் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் தெரியவருகிறது.
குறிப்பாக தொலைத்தொடர்புத்துறை தனியார் சுகாதாரம் புகையிலை உள்ளிட்ட துறைகளு க்கு வற் வரி அதிகரிப்பு அமுலாகும் என தெரிவிக்கப்படுகின்றது.
ஏற்கனவே கடந்த மே மாதம் 2ஆம் திகதி முதல் வற்வரி அதிகரிப்புச் சட்டமூலம் அமுலுக்கு வந்ததோடு, 11 வீதமாக இருந்த வற் வரியானது 15 வீதமாக அதிகரிக்கப்பட்டிருந்தது.
எனினும் அத்தியாவசியப் பொருட்கள் சிலவற்றுக்கு வற்வரி சட்டமூலம் உட்படுத்தப்பட மாட்டாது என அரசாங்கத்தினால் பிரகடனம் செய்யப்பட்டிருந்தது.
எவ்வாறெனினும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச வற்வரி அதிகரிப்பு சட்டமூலம் சட்டவிரோதமானது எனக்கூறி வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.
அதன்படி வழக்கினை ஆராய்ந்த உயர்நீதிமன்றம் வற்வரி அதிகரிப்பு சட்டமூலமானது அரசி யலமைப்புக்கு முரணானது எனக்கூறியதுடன் வற்வரி அதிகரிப்புக்கு இடைக்கால தடையையும் விதித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
வேலைத்தளம்/ உதயன்