அரசியல்ரீதியான உரிமைக்காய் போராடும் தமிழ் முற்போக்கு கூட்டணி

”மலையக மக்களுக்கான அரசியல் ரீதியிலான உரிமைகளையும் வென்றெடுப்பதற்காகவே தமிழ் முற்போக்கு கூட்டணி அரசாங்கத்துக்குள் இருந்தபடியே போராடிவருகின்றது. மக்களுக்கான இந்த அரசியல் இராஜ தந்திரத்தை, சில குழுக்கள், அரசியல் நாடகமென விமர்சிப்பது அறியாமையின் உச்சகட்டமாகும்.”- என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டிமாவட்ட எம்.பியுமான வேலுகுமார் சுட்டிக்காட்டினார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஊக்குவிப்பு கொடுப்பனவாக 140 ரூபா வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் அரசாங்கத்தில் இருந்து வெளியேறுவோம் என தமிழ் முற்போக்கு கூட்டணி அறிவிப்பு விடுத்திருந்தது.

எனினும், அரசாங்க தரப்புடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் வெற்றியளிக்கவில்லை. உங்கள் அணியால் முன்வைக்கப்பட்ட தொகையும் வழங்கப்படவில்லை. அப்படியானால் தமிழ் முற்போக்கு கூட்டணியும் தொழிலாளர்களை காட்டிக்கொடுத்துவிட்டு, அரசியல் நாடகமாடுவதாக குற்றச்சாட்டுகளை முன்வைக்கப்பட்டுவருகின்றன. இது தொடர்பில் உங்களின் கருத்து என்ன என்று கண்டியில்  நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் சிலர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே வேலுகுமார் எம்.பி. மேற்கண்ட விடயத்தை சுட்டிக்காட்டினார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது,

” மலையக மக்களும் நாட்டிலுள்ள ஏனைய இன மக்களைப் போல் அனைத்து உரிமைகளையும், எவ்வித பாகுபாடுமின்றி அனுபவிக்க வேண்டும் என்பதுதான் எமது இலக்காகும். எனவே தான், அபிவிருத்தி அரசியல், உரிமை அரசியல் ஆகிய இரண்டையும் சமாந்தரமாக முன்னெடுத்துவருகின்றோம். சலுகைகளை அனுபவிப்பதற்காக உரிமைகளை விட்டுக்கொடுத்து, கைகட்டி, வாய்பொத்தி ஆமாம் சாமி அரசியலை எமது கூட்டணி முன்னெடுக்கவில்லை. இனியும் முன்னெடுக்காது.

பெருந்தோட்டத்தொழிலாளர்களின் சம்பளத்தை நிர்ணயிக்கின்ற கூட்டுஒப்பந்த முறைமை மறுசீரமைப்புக்குள்ளாக்கப்பட வேண்டும். தோட்டத்தொழிலாளர்கள், சிறுதோயிலைத் தோட்ட உரிமையாளர்களாக மாற்றப்பட வேண்டும் என்பதுதான் எமது தூரநோக்கு சிந்தனையாக – நிலைப்பாடாக உள்ளது. அந்த இலக்கை நோக்கி பயணிப்பதற்காகவே போராடிவருகின்றோம்.

பெருந்தோட்டத்தொழிலாளர்களும், அரசாங்க பொறிமுறைக்குள் உள்வாங்கப்பட வேண்டும். அவர்களுக்கான சம்பளம் அரச நிர்ணயங்களுக்கமைய தீர்மானிக்கப்பட வேண்டும். அந்தவகையில் முதல்முறையாக வரவு – செலவுத் திட்டம் ஊடாக கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது. இதை புதியதொரு பரிணாகமாகவே நாம் பார்க்கின்றோம்.

தொகையில் தொங்கிக்கொண்டிருக்காது, தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினையில் அரசாங்கம் தலையிட்டுள்ளது. எனவே, இது மாற்றத்துக்கான ஆரம்பம் என நாம் சிந்திக்கவேண்டும். முறைமையில் மாற்றம் வந்ததானது பாரிய வெற்றியாகும். இதற்கான அரசியல் ரீதியிலான அழுத்தங்களை தமிழ் முற்போக்கு கூட்டணியே கொடுத்தது.

கிராமப்பகுதிகளில் சமூர்த்தி வழங்கப்படுகின்றது. இதற்கான கொடுப்பனவு பாதீட்டிலேயே ஒதுக்கப்படுகின்றது. எனவே, தோட்டத்தொழிலாளர்களுக்கு கொடுப்பனவை வழங்குவதற்கு பட்ஜட் ஊடாக நிதி ஒதுக்குவதில் என்ன தவறுள்ளது? அதனால், நாட்டின் பொருளாதாரத்துக்கு ஏற்படப்போகும் தாக்கம் தான் என்ன?

ஆகவே, மொட்டைத் தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சிப்போடும் வகையில் அறிவிப்புகளை விடுக்காது, ஆறாம் அறிவை பயன்படுத்தி , எந்தவொரு விடயமாக இருந்தாலும் அதை அலசிஆராயுமாறு மலையக சமூக செயற்பாட்டாளர்களிடம் உரிமையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.” என்றார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435