மலையகத்தில் பெருந்தோட்டப்பகுதிகளில் ‘கொரோனா’ வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் – என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.
“கொரோனா” வைரஸ் தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று நேற்று முன்தினம் (23) அட்டனிலுள்ள பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் அலுவலகத்தில் அமைச்சர் தொண்டமான் தலைமையில் நடைபெற்றது.
“கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு எனது அமைச்சின் ஊடாக முழு ஒத்துழைப்பும் வழங்கப்படும். அத்திட்டத்தை எவ்வாறு முன்னெடுக்கலாம் என்பது பற்றி கலந்துரையாடப்பட்டது.
நேற்றும் (22) கூட்டமொன்று நடைபெறவுள்ளது. இராணுவத்தினர், பொலிஸார், பிரதேச சபை தலைவர்கள் ஆகியோர் இச்சந்திப்பில் கலந்துகொள்ளவுள்ளனர். பெருந்தோட்டப்பகுதிகளில் இந்நோய் பரவாமல் இருப்பதற்கு என்னென்ன உதவிகள் தேவையோ அவை அனைத்தும் எனது அமைச்சின் ஊடாக வழங்கப்படும்.
அதேவேளை, தை பிறந்தால் வழி பிறக்கும் என நான் கூறியிருந்தேன். இதன்படி ஏப்ரல் 10 ஆம் திகதி சம்பளத்துடன் ஆயிரம் ரூபா நிச்சயம் கிடைக்கும்.
நாட்டில் தற்போது வறட்சியான காலநிலை நிலவுகின்றது. பொலிஸ் ஊரடங்குச்சட்டமும் அமுலில் உள்ளது. அதற்கான நிவாரணமும் எமது மக்களுக்கு பெற்றுக்கொடுக்கப்படும்.” – என்றார்.