ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டும் கடமைக்கு செல்லாத பெருந்தோட்டத்துறை ஆசிரியர்களுக்கு மீண்டும் நியமனம் வழங்கப்பட மாட்டாது என்று கல்வி இராஜாங்க அமைச்சர் வி. இராதாகிரஷ்ணன் தெரிவித்துள்ளார்.
பெருந்தோட்ட ஆசிரியர் உதவியாளர்களுக்கான நியமனக்கடிதங்களை வழங்கும் நான்காம் கட்ட நிகழ்வு நேற்று (27) நடைபெற்றபோது கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், பல போராட்டங்களுக்கு பின்னர் இந்த நியமனம் வழங்கப்படுகிறது.எனவே இந்த நியமனக்கடிதத்தைப் பெற்று பொறுப்புடன் செயற்படுங்கள். ஆசிரியர்களுக்கான சம்பளத்தை 10,000 ரூபாவால் அதிகரிக்குமாறு நான் கேட்டதற்கு இணங்க அமைச்சர் அமைச்சரவை அனுமதியுடன் அதனை நிறைவேற்றுவதாக கூறியுள்ளார்.
சம்பளம் போதாதென்று விலகியவர்கள் 10,000 ரூபா அதிகரித்த பின்னர் மீண்டும் இணைய நினைத்தால் முடியாது. முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச ஜனசவிய ஆசிரியர் திட்டத்தில் ஆசிரியர்களை உள்வாங்கிய போது அவர்களுடைய சம்பளம் 1000 ரூபா மட்டுமே. இன்று அவர்கள் நல்ல சம்பளம் பெற்றுக்கொள்கின்றார்கள். பொறுமையாக இருந்தால் சாதிக்க முடியும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
வேலைத்தளம்/ நன்றி- தினகரன்