மண்சரிவு மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுகாதார வசதிகளை வழங்குவதே தற்போதுள்ள அத்தியாவசிய தேவையாக உள்ளது. எனவே வைத்தியர்கள் இக்காலப்பகுதியில் விடுமுறை பெறுவதையோ அல்லது விடுமுறையில் நீடிப்பதையோ தவிர்த்து கொள்ளவும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும் பாதிப்புக்குள்ளான பிரதேசங்களுக்கு அண்மையில் வாழும் வைத்தியர்கள் தற்போது விடுமுறை பெற்றிருப்பார்களாயின் அவர்களை உடனடியாக மீள பணிக்கு திரும்புமாறும் அச்சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
தொழில்சார் நிபுணர்கள் அமைப்பின் கேட்போர் கூடத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவ்வமைப்பின ஊடக பேச்சாளர் வைத்தியர் நலிந்த ஹேரத் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், நாடுபூராகவும் ஏற்பட்டுள்ள அசாதாரண காலநிலை மாற்றம் காரணமாக பல உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளன. அத்துடன் பல்லாயிரக்கணக்கானோர் அநாதரவாக்கப்பட்டும் உள்ளனர். தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக தொற்று நோய்கள் ஏற்படாமல் இருக்கவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுமையான சுகாதார வசதிகளை ஏற்படுத்தவும் அனைத்து சுகாதார நிறுவனங்களும் தயாராக உள்ளன.
மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலருணவு மற்றும் சுத்தமான நீர் போன்றன அத்தியாவசிய தேவையாக உள்ளன. இதனடிப்படையில் இன்றும் நாளையும் அரச வைத்தியர் குழுவினர் பலரும் குறித்த பகுதிகளுக்கு சுகாதார பரிசோதனைகளுக்காக செல்லவுள்ளனர். மேலும் ஏற்கனவே தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கான அடிப்படை சுகாதார வைத்திய வசதிகள் ஏற்படுத்தவென நாடுபூராகவுமுள்ள வைத்தியர்கள் குழுக்களாகவும் தனிநபர்களாகவும் அரச நிறுவனங்களோடும் இணைந்து செயற்பட்டு வருகின்றனர்.
எனவே பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களை வழமைக்கு கொண்டுவர அனைவரும் ஒன்றிணைய வேண்டும். இதற்கென இக்காலப்பகுதியில் வைத்தியர்கள் விடுமுறை பெறுவதையோ அல்லது விடுமுறையில் நீடிப்பதையோ தவிர்த்து கொள்ளவும் வேண்டும். மேலும் பாதிப்புக்குள்ளான பிரதேசங்களுக்கு அண்மையில் வாழும் வைத்தியர்கள் தற்போது விடுமுறை பெற்றிருப்பார்களாயின் அவர் களை உடனடியாக மீள பணிக்கு திரும்புமாறும் கேட்டுக்கொள்கின்றோம் என்றார்.
வேலைத்தளம்