சீஸ் தொழிற்சாலை ஊழியர் போராட்டம் நிறைவு

திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட போகாவத்தை பகுதியில் அமைந்துள்ள கொத்மலை சீஸ் தொழிற்சாலையில் ஊழியர்கள் போராட்டம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலையீட்டால் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

பல்வேறு குறைபாடுகள் மற்றும் கோரிக்கைகளை முன்வைத்து சீஸ் தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்கள் கடந்த 29ம் திகதி முதல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இந்த நிலையில் அத் தொழிற்சாலையின் ஊழியர்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகள் தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் கவனத்திற்கும் கொண்டு வந்துள்ளனர்.

இதனையடுத்து, 30ம் திகதி மாலை சீஸ் தொழிற்சாலை விவகாரம் தொடர்பாக கொட்டகலையில் அமைந்துள்ள தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையமான சீ.எல்.எப்வில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான ஆறுமுகன் தொண்டமான், மற்றும் காங்கிரஸின் இளைஞர் அணி பொது செயலாளர் ஜீவன் தொண்டமான் ஆகியோரின் தலைமையில் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

30ம் திகதி இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் எட்டப்பட்ட தீர்வுகள் மீறப்பட்டதால் மீண்டும் நேற்றுமுன்தினம் (01) பேச்சுவார்த்தை இடம்பெற்றது.

இதற்கமைய காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமானின் வழிகாட்டலுக்கு அமைவாக நேற்றுமுன்தினம் சீஸ் தொழிற்சாலையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் காங்கிரஸின் உப செயலாளர் பரத் அருள்சாமி தொழிற்சாலையின் உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டுள்ளார்.

இதன்போது தொழிற்சாலைக்கு எதிராக பல குற்றச்சாட்டுகளை முன்வைத்த ஊழியர்கள் தொடர்பில் அவர்கள் முன்வைத்த கோரிக்கைகளும் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளது.

அந்தவகையில் தற்காலிக ஊழியர்களாக உள்வாங்கப்பட்டு நிரந்தர ஊழியர்களாக்காமல் காணப்படும் 50ற்கும் மேற்பட்டோர் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இவர்களை ஒரு மாத காலத்திற்குள் நிரந்தர தொழிலாளர்களாக உள்வாங்கப்பட வேண்டும் என தீர்வு காணப்பட்டுள்ளது.

அதேநேரத்தில் ஊழியர்களுக்கு இடையூறாக செயல்பட்டு வந்த முகாமையாளர் ஒருவரையும், மேலும் தொழில் மேற்பார்வையாளர்கள் இருவரையும் தொழிற்சாலையிலிருந்து இடமாற்றம் செய்யப்பட வேண்டும் என முன்வைக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் மேற்பார்வையாளர்களில் இருவரில் ஒருவரை உடனடியாக இடமாற்றம் செய்வதாகவும், மேலும் ஒருவரை ஒரு மாத காலத்திற்குள் இடமாற்றம் செய்வதாகவும் தெரிவித்துள்ள தொழிற்சாலை நிர்வாகம் முகாமையாளர் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

அதேநேரம் அத் தொழிற்சாலையில் பணிபுரிகின்ற பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதாகவும், நிரந்தமற்ற தொழிலாளர் பெண்களுக்கு நிரந்தரமாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.

தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் உணவு இலவசமாக வழங்கப்படுகின்றது. இவ் உணவை வழங்கும் உரிமையாளர் தரமான உணவுகளை வழங்காத பட்சத்தில் அவரை இடைநிறுத்தி புதியவரை உள்வாங்க வேண்டும் எனவும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

தொழிற்சாலை அமைந்துள்ள பகுதியில் காணப்பட்ட 100 வருடம் பழமைவாய்ந்த ஆலயம் ஒன்றை மீண்டும் புனரமைத்து தர தொழிற்சாலை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், ஆலயத்தின் நிர்வாக பொறுப்பில் தொழிற்சாலையில் பணிபுரியும் ஐவர் அடங்கிய குழு உள்வாங்கப்பட வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேற்குறித்த கோரிக்கைகள் அனைத்தையும் பொறுப்பேற்றுள்ள சீஸ் தொழிற்சாலை நிர்வாகம் சம்பளம் தொடர்பில் தொடர்ந்து வரும் நாட்களில் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு தீர்வு ஒன்றுக்கு எட்டுவதாக தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து போராட்டத்தை கைவிட்டு நேற்று (02) முதல் வழமையான தொழிலுக்கு தொழிலாளர்கள் செல்ல வேண்டும் எனவும் இதன்போது தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435