தொழிலின் போது கடலில் மரணமடைந்த கடற்றொழிலாளர்கள் பற்றிய விபரங்களை வடமாகாண கூட்டுறவு அமைச்சு, கூட்டுறவுத் திணைக்களத்தினூடாகத் திரட்டி வருகின்றது.
வடமாகாண சபை தோற்றம் பெற்ற 2013ஆம் ஆண்டு காலப்பகுதியில் இருந்து கடலில் தொழிற் செய்யும்போது மரணம் அடைந்த கடற்றொழிலாளர்களின் குடும்பங்களுக்கு கூட்டுறவு அமைச்சு வாழ்வாதார உதவித் தொகையாக ஒரு இலட்சம் ரூபா வழங்குவதற்குத் தீர்மானித்துள்ளது.
எனவே, கடலில் இறந்த கடற்றொழிலாளர்களின் குடும்பங்கள் விண்ணப்பப் படிவங்களை கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களிடம் இருந்து பெற்றுப் பூர்த்திசெய்து மரணச்சான்றிதழுடன் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசங்களினூடாக கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளருக்கு இம் மாதம் 24ஆம் திகதிக்குள் அனுப்பி வைக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பனையில் இருந்து தவறி வீழ்ந்து இறந்த பனைத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவியாக ஒரு இலட்சம் ரூபாவை வடமாகாண கூட்டுறவு அமைச்சு வழங்கி வருவதும் குறிப்பிடத்தக்கது.
வேலைத்தளம்