நல்லாட்சி அரசாங்கத்தில் தனியார் துணை பணியாளர்களுக்கு 2500 ரூபா சம்பள உயர்வினை பெற்றுக் கொடுக்க எடுத்துகொண்ட முயற்சி மகிழ்ச்சிக்குரியது. எனினும் , இச்சம்பள உயர்வானது முறையான வகையில் அனைவருக்கும் கிடைக்கவில்லை என்பதை கவலையுடன் தெரிவிக்க வேண்டிய கட்டாயம் தற்போது ஏற்பட்டுள்ளது.
சில நிறுவனங்கள் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கேற்ப 2500 ரூபாவை சம்பளத்துடன் இணைத்துள்ள போதிலும் சில நிறுவனங்கள் இன்னமும் இணைக்கவில்லையென்று தற்போது தகவல்கள் வௌியாகியுள்ளன. வர்த்தமானியூடாக வௌியிடப்பட்ட இவ்வறிவித்தல் வௌியிடப்பட்ட போதிலும் சம்பள உயர்வை வழங்காத நிறுவனங்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்வதுடன் உடனடியாக சம்பள உயர்வை பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய அவசியமாகும்.
இவ்வாறான செயற்பாடுகள் தனியார் துறைக்கொன்றும் புதிய விடயமல்ல. தமது சம்பள உயர்வை கேட்டுக்கொள்ளும் உரிமை தனியார் துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு இல்லை. அவ்வாறு கோரினால் தொழில்களை இழக்கவேண்டி வரும். கடந்த 2ஆம் திகதி தொடக்கம் அரசாங்கம் 15 வீத வற் வரியை அதிகரித்துள்ளது. இதனால் பல அத்தியவசிய பொருட்களின் விலை மிகவும் அதிகரித்துள்ளது என்பது யாவரும் அறிந்த விடயமே. இதேவேளை, தொலைபேசி உரையாடலுக்கு அதிகரித்துள்ள 40 வரியானது பாரிய அடியாகவே பார்க்கப்படவேண்டியுள்ளது.
மேற்கூறிய சம்பள உயர்வை பெறாத தனியார் துறை ஊழியர்கள், பொது மக்களின் நிலை மரத்திலிருந்த விழுந்தவனை மாடு முட்டிய கதையாகவே உள்ளது.
‘எம் நாட்டு மக்களுக்கு பேச்சில் இருக்கும் வீரம் செயலில் இல்லை’ வேலை செய்வதை விடவும் வாய்ப்பேச்சில் தான் அக்கறை காட்டுகின்றனர். அது எவ்வாறாயிருப்பினும் தொலைபேசி உரையாடலுக்கு 40 வீத வரியை நல்லாட்சியில் அதிகரித்துள்ளமை ஏற்றுக்கொள்ள முடியாத நியாயமற்ற செயலாகும். 10 வீத வரி என்றால் நியாயமானது.
இவ்வாறு தொலைபேசி உரையாடலுக்கு வரி விதிக்கப்பட்டதால் காதலர்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேற்கூறப்பட்ட விடயங்களை கருத்திற் கொண்டு தனியார் துறையினருக்கான 2500 ரூபா சம்பள உயர்வை பெற்றுகொடுக்க நடவடிக்கை எடுப்பது மக்களுக்கு நன்மை பயக்கும்.
வேலைத்தளம்- குமாரதாச சுமித்தராராச்சி- தினமின