பதவி வெற்றிடங்கள் இல்லாத காரணத்தினால் வட மாகாண சுகாதார தொண்டர்களை உள்வாங்க முடியாத நிலை காணப்படுவதாக சுகாதார அமைச்சர் தெரிவித்தார் என்று வட மாகாண ஆளுநர் தெரிவித்தார் என்று இது வரை நிரந்தர நியமனம் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்த சுகாதார தொண்டர்கள் தெரிவித்துள்ளனர்.
நேற்றுமுன்தினம் வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேவுடனான சந்திப்பு தொடர்பில் தெரிவிக்கையிலேயே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.
வடமாகாணத்தைச் சேர்ந்த சுமார் 350 சுகாதர தொணடர்கள் தமக்கான நிரந்தர நியமனம் வழங்கக் கோரி தொடர்ச்சியாகப் பல போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
குறிப்பாக, யாழ்ப்பாணம் பண்ணையில் அமைந்துள்ள வடமாகாண சுகாதார அமைச்சரின் அலுவலகத்திற்கு முன்பாகவும், வடமாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாகவும், கைதடியில் உள்ள வடமாகாண சபையின் பேரவைச் செயலகத்திற்கு முன்பாகவும் அவர்கள் பல முறை தமக்கான நிரந்தர நியமனங்கள் வழங்கப்படவேண்டும் எனக் கோரி போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
எனினும், குறித்த போராட்டங்களில் அவர்களுக்கு சாதகமான பதில்கள் எட்டப்பட்டிராத நிலையில் வடமாகாண ஆளுநர் சுகாதாரத் தொண்டர்களை நேற்று முன்தினம் அழைத்து கலந்துரையாடலை மேற்கொண்டிருந்தார்.
குறித்த கலந்துரையாடலில் கலந்து கொண்ட சுகாதாரத் தொண்டர்கள் கருத்துத் தெரிவிக்கையில், உறுதியான முடிவுகளைத் தருவதாக கூறியே ஆளுநர் எங்களை கலந்துரையாடலுக்கு அழைத்திருந்தார். இருப்பினும், அங்கு எங்களுடைய பிரச்சினைகள் தொடர்பாக கேட்டறிந்த அவர் உடனடியாக வடமாகாண சுகாதார அமைச்சருடன் தொடர்பு கொண்டு எமது நியமனங்கள் தொடர்பாக பேசியிருந்தார்.
தற்போது எமக்கான பதவி வெற்றிடங்கள் இல்லையெனவும் அதனால் எம்மை அப்பணியில் உள்வாங்க முடியாது என்றும் வடமாகாண சுகாதார அமைச்சர் தெரிவித்ததாக ஆளுநர் எமக்கு தெரிவித்திருந்தார்.
அத்துடன், எமது பிரச்சினைகள் தொடர்பில் சுகாதார அமைச்சரது செயற்பாட்டை மீறி தம்மால் எதுவும் செய்யமுடியாது என ஆளுநர் தெரிவித்துள்ளதாக சுகாதாரத் தொண்டர்கள் தெரிவித்துள்ளனர்.
வேலைத்தளம்/ வீரகேசரி