அரசாங்க நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சின் கீழ்வரும் சேவைகளில் 8388 வெற்றிடங்கள் காணப்படுவதாகவும் இதில் அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையில் மட்டும் ஆகக்கூடியதாக 3270 வெற்றிடங்கள் உள்ளதாகவும் அரச தரப்பு பிரதம கொறடாவும் அமைச்சருமான கயந்த கருணாதிலக தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் கடந்த புதன்கிழமை (20) இடம்பெற்ற வாய்மூல வினாவுக்கான கேள்வியின்போது ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட எம்.பி.யான மரிக்கார் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இதனைத் தெரிவித்த அமைச்சர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
அரசாங்க நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் நாடளாவிய சேவைகள் மற்றும் இணைச் சேவைகளில் தற்போது 8388 வெற்றிடங்கள் உள்ளன.
இதற்கமைய இலங்கை நிர்வாக சேவையில் 207, இலங்கை விஞ்ஞான சேவையில் 178, இலங்கை கட்டட நிர்மாண கலையியல் சேவையில் 18, இலங்கை பொறியியல் சேவையில் 147, இலங்கை கணக்காளர் சேவையில் 184, இலங்கை திட்டமிடல் சேவையில் 137, அரசாங்க மொழிபெயர்ப்பு சேவையில் 199, அரசாங்க நூல்கள் சேவையில் 394, அரசாங்க முகாமைத்துவ உதவியாளர் சேவையில் 2340, இலங்கை தொழில்நுட்ப சேவையில் 1071, அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையில் 3270, அலுவலக உதவியாளர் சேவையில் 55, கல்விச் சேவையில் 188 வெற்றிடங்களும் உள்ளன.
இந்த வெற்றிடங்களுக்கு அதாவது ஒன்று முதல் 10 வரையான சேவை வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேவேளை அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவைக்காக வேலையற்ற பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்யும் போது பட்டதாரி பயிலுனர் வேலைத்திட்டத்தின் கீழ் அமைச்சரவை தீர்மானத்திற்கு ஏற்ப அரச சேவையில் தற்போது சேவையாற்றும் பட்டதாரி ஆளணியினரை பரீசிலனை செய்து அதன் பெறுபேற்றுடன் அவர்களது உற்பத்தி திறன் மிக்கவர்களாக மீண்டு பணியில் அமர்த்துவதற்கான முறைமையொன்றினை தயாரிக்கும் வரை அரச உத்தியோகத்தர் பதவிக்கான ஆட்சேர்ப்பினை ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார்.
வேலைத்தளம்/ நன்றி- வீரகேசரி