பெண்கள் கொழுந்து பறிப்பதால் தான் தேயிலை துறை சார்ந்த அனைவருக்கும் வரு மானம் கிடைக்கின்றது. அவர்கள் தான் அனைவரையும் வாழ வைக்கின்றார்கள். குடும்பப் பாரத்தையும் சுமக்கின்றார்கள். எனவே, கூட்டு ஒப்பந்தத்தின் ஊடாக ஊதியத்தைப் பெற்றுக் கொடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் மகளிர் பிரிவு தலைவியும், மத்திய மாகாண சபை உறுப்பினருமான சரஸ்வதி சிவகுரு தெரிவித்தார்.
மாகாண சபையின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து சுமார் 3 இலட்ச ரூபா பெறுமதி வாய்ந்த சமையல் பத்திரங்கள் 7 கிராம அபிவிருத்தி சங்கங்களைச் சேர்ந்த மகளிர் குழுக்களுக்கு பகிர்ந்தளிக்கும் நிகழ்வு நோர்வூட் வீ.கே. வெள்ளையன் ஞாபகார்த்த இளைஞர் பயிற்சி நிலையத் தில் இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு பேசும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து பேசுகையில், மலையகப் பெண்கள் வெறுமனே தோட்டத்தில் வேலை செய்வதோடு மாத்திரம் நின்று விடக் கூடாது. அரசியல், தொழிற்சங்க நடவடிக்கைகளிலும் பங்குபற்ற வேண்டும். அவர்களை வழி நடத்துவதற்காக மகளிர் இணைப்பதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ள பெண்களுக்கு தலைமைத்துவப் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் வார இறுதி நாட்களில் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றி கலந்துரையாட வேண்டும். பிரச்சினைகள் வெளியே வந்தால் தான் அவற்றுக்கான தீர்வை நோக்கி நாம் நகரக் கூடியதாக இருக்கும்.
மலையகப் பெண்கள் தான் மிகவும் கஷ்டப்பட்டு உழைக்கின்ற வர்க்கமாக இருக்கின்றார்கள். பெண்கள் கொழுந்து பறிப்பதால் கிடைக்கும் வருமானத்தில் தான் ஆண்களுக்கும் சம்பளம் கிடைக்கின்றது. தோட்ட முகாமையாளர்கள், உத்தியோகத்தர்கள் என பல தரப்பட்டவர்களுக்கும் வேதனம் கிடைக்க பெண்களின் உழைப்பே காரணமாக இருக்கின்றது. அவர்களால் தான் தொழிற்சங்கங்களுக்கும் மாதாந்தம் சந்தாப் பணம் கிடைக்கின்றது. ஆனால், பெண்களின் நிலையை உணர்ந்து உரிய நேரத்தில் ஊதிய உயர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்று நினைக்காமல் அக்கறையின்றி இருப்பது வேதனையாக இருக்கின்றது.
வரவு செலவுத் திட்டத்தில் தனியார் துறை ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்ட 2500 ரூபா சம்பள உயர்வை இடைக்கால நிவாரணமாக அமைச்சர் திகாம்பரம் பெற்றுக் கொடுத்துள்ளார். அதேபோல், கூட்டு ஒப்பந்தம் செய்து கொள்கின்றவர்கள் காலத்தை இழுத்தடிக்காமல் உடனடியாக சம்பள உயர்வைப் பெற்றுக் கொடுக்க வேண்டும்.
கூட்டு ஒப்பந்தம் காலாவதியாகி ஒன்றரை ஆண்டுகள் உருண்டோடி விட்டன. கம்பனிகளுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிவடைந்துள்ளன. மீண்டும் பேச்சுவார்த்தையை நடத்த சம்பந்தப்பட்ட தொழிற்சங்கங்கள் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.
இந்நிலையில் தோட்டங்கள் நட்டத்தில் இயங்குவதாக கம்பனிகள் தெரிவித்து வருகின்றன. அதனால், தொழிலாளர்களை போராட்டத்தில் இறக்க சிலர் முயற்சிப்பதாகவும் கூறப்படுகின்றது. அவர்கள் போராட் டம் செய்ய வேண்டிய அவசியம் எதுவும் கிடையாது. கூட்டுஒப்பந்தத் தொழிற்சங்கங்களே உரிய முறையில் ஊதிய உயர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றார்.
வேலைத்தளம்/ வீரகேசரி