முதலாளிமார் சம்மேளத்துடன் அரசாங்கமும் தொழிற்சங்களும் மேற்கொள்ளப்படவுள்ள ஒப்பந்தத்தினூடாக தோட்டத் தொழிலாளரின் சம்பளம் இன்னும் குறைவடையும் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸிற்கும் முதலாளிமார் சம்மேளத்திற்கும் இடையில் பேச்சுவார்த்தையொன்று இடம்பெறவுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உபதலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் செந்தில் தொண்டமான் கருத்து தெரிவிக்கையில், புதிய உற்பத்திசார் கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் தற்போது தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் 650 ரூபா சம்பள முறையினை மாற்றுமாறு அரசாங்கம் தெரிவி்த்ததாகவும் அதற்கு தொழிற்சங்கங்கள் இணக்கம் தெரிவித்ததாகவும் முதலாளிமார் சம்மேளனம் தெரிவித்தது. இதனை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முற்றாக நிராகரிக்கிறது.
பழைய சம்பளத்துடன் 1000 ரூபாவிற்கு சம்பள அதிகரிப்பை மேற்கொள்வதே எமது நோக்கம். 2500 ரூபா சம்பளம் அதிகரிக்கப்பட்டதாக தம்பட்டம் அடித்துக்கொண்டாலும் எத்தனைத் தோட்டங்களில் அச்சம்பளம் தொழிலாளர்களைச் சென்றடைந்தது. 100 ரூபா சம்பளம் அதிகரிக்கப்பட்டது. அதற்கேற்றவாறு ஊழியர் நம்பிக்கை நிதியம் மற்றும் சேமலாப நிதியம் அதிகரிக்கப்படவில்லை. குறித்த விடயங்கள் தொடர்பில விரைவில் ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளோம். அதற்கான ஆவணங்கள் தற்போது தயாரிக்கப்பட்டு வருகிறது என்று அவர் மேலும் தெரிவித்தார்.
வேலைத்தளம்