ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்தார் என்ற காரணத்திற்காக கொழும்பு மஹானாம கல்லூரி ஆசிரியைக்கு பணித்தடை விதித்தமை சட்டவிரோதமானது என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மஹானாம கல்லூரியில் இடம்பெறும் ஊழல்கள் மற்றும் தவறான செயற்பாடுகள் தொடர்பில் ஆசிரியையொருவர் ஊடகத்திற்கு கருத்து தெரிவித்தார். இதனை காரணம் காட்டி அப்பாடசாலை அதிபர் மற்றும் இரு ஆசிரியர்கள் அவ்வாசிரியருக்கு பணித்தடை விதித்தனர்.
இதனையடுத்து அடிப்படை உரிமை மீறல் தொடர்பான மனுவை குறித்த ஆசிரியர் உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்தார். இன்று (28) இவ்வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட பிரதம நீதியரசர் கே. ஸ்ரீபவன் உள்ளிட்ட 3 நீதிபதிகளை கொண்ட நீதிபதிகள் குழு இலங்கை அரசியல் அமைப்பிற்கமை சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பது மீறப்பட்டிருப்பதுடன் குறித்த ஆசிரியையின் கருத்து சுதந்திரம் மீறப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும் பொறுப்புக்கூறவேண்டிய அதிபர் மற்றும் ஆசிரியர் தலா ஒரு இலட்சம் ரூபா நட்டஈடு வழங்கவேண்டும் என்றும் உத்தரவிட்டது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதான செயலாளர் ஜோசப் ஸ்டாலின் அரச ஊழியர்களின் பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் உறுதிப்படுத்தப்படுததும் வகையில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தான் பணியாற்றும் இடத்தில் இடம்பெறும் துஷ்பிரயோகங்களுக்கு எதிராக ஊழியர்கள் நடவடிக்கை எடுக்க இத்தீர்ப்பு ஊழியர்களுக்கு ஒரு உந்துசக்தியாக அமைந்துள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
வேலைத்தளம்