ஓமானின் துறைமுக நகரான மஸ்கட்டில் பலவந்தமாக விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 21 தாய்லாந்து பெண்களை ஓமான் பொலிஸாருடன் இணைந்து தாய்லாந்து அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
முகப்புத்தகத்தில் காணப்பட்ட “Pattaya find job+job application” குழுவில் மஸ்கட்டில் உள்ள ஸ்பா நிலையங்களில் வேலைவாய்ப்பு உள்ளதாக வெளியாகியிருந்த தகவலை நம்பி விண்ணப்பித்த பெண்களே இவ்வாறு விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
குறித்த பெண்கள் மாதாந்தம் 100,000 பட் ( 10,615 தினார்) சம்பளமாக பெற்றதுடன் மஸ்கட்டுக்கு செல்வதற்கான இலவச விமான டிக்கட்டுக்களையும் பெற்றுக்கொண்டுள்ளனர் என்று தாய்லாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மனிதக்கடத்தல் தடுத்தல் நடவடிக்கையினூடாகவே குறித்த பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர். குறித்த பெண்கள் மஸ்கட்டை அடைந்தவுடன் அவர்களுடைய கடவுச்சீட்டுக்கள் பறிக்கப்பட்டதுடன் பிறருடனான தொடர்பாடலும் முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது.
20- 30 வயதுக்குட்பட்ட குறித்த பெண்கள் பலவந்தமாக, நீண்ட நேரம் விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றும் அதில் சிலருக்கு எச்.ஐ.வி தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலொன்றின் அடிப்படையில் நடத்தப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையிலேயே இப்பெண்கள் மீட்கப்பட்டதுடன் விபசார தொழிலை நடத்திய மேலும் இரு பெண்களும் கைது செய்யப்பட்டனர்.
ஓமான் பொலிஸாரால் கடந்த மாதம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட திடீர் சோதனையின் போது 20 பாலியல் தொழிலாளிகளும் விபசார தொழிலை நடத்தி வந்த 7 ஆண்களும் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
வேலைத்தளம்/கல்ப் நியுஸ்