தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்கான கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. 730 சம்பள உயர்வுடன் 6 நாள் வேலை வழங்குவது என்ற இணக்கப்பாட்டுடன் முதலாளிமார் சம்மேளனம் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது.
கொழும்பு வர்த்தக மையத்தில் அமைந்துள்ள அபிவிருத்தி மற்றும் வர்த்தக அமைச்சின் கேட்போர்கூடத்தில் இன்று பிற்பகல் ஆரம்பித்த பேச்சுவார்த்தைகளயடுத்து 730 ரூபா சம்பள உயர்வுடன் ஆறு நாள் வேலை வழங்கவும் கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. எனினும் கடந்த 18 மாதங்களாக வழங்கப்படாத சம்பள உயர்வு நிலுவையை வழங்குவது தொடர்பில் இவ்வொப்பந்தத்தில் கவனம் செலுத்தப்படவில்லை.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம், கூட்டு தொழிலாளர் சங்கம் என்பவற்றின் பிரதிநிதிகள் மற்றும் முதலாளிமார் சம்மேளனத்தின் பிரதிநிதிகள் இக்கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.
இவ்வொப்பந்தமானது 2 வருடங்களுக்கு செல்லுபடியாகும்.
இதேவேளை, ஆயிரம் ரூபா சம்பள உயர்வு கோரி தோட்டத் தொழிலாளர்கள் இன்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.