
ஸ்ரீ லங்கா கிரிக்கட் நிறுவனத்தில் தம்மை நிரந்தர பணியாளர்களாக உள்வாங்காவிட்டால் எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாக தம்புள்ளை சர்வதேச கிரிக்கட் மைதான பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தம்மை நிரந்தர பணியாளர்களாக சேவையில் உள்வாங்குமாறு கோரி தம்புள்ளை சர்வதேச கிரிக்கட் மைதான பணியார்கள் கடந்த ஆறு நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மைதான பார்வையாளர் அரங்கின் மீதேறி அமர்ந்து அவர்கள் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
இந்த நிலையில், தமது போராட்டத்தை நேற்று கைவிட்ட பணியார்கள், தமது பணியை தொடர மைதானத்துக்கு சென்றுள்ளனர்.
எனினும், தம்மை பணிக்கு வர வேண்டாம் என மைதான நிர்வாக அதிகாரி ஒருவர் கூறினார் என மைதான காவலாளி தெரிவித்ததாக பெயர் குறிப்பிட விரும்பாத பணியாளர்கள் ஒருவர் எமது இணைதளத்திடம் தகவல் வெளியிட்டார்.
இதையடுத்து, பணிக்கு செல்லாது தாம் திரும்பியதாகவும் அவர் கூறினார்.
இந்த நிலையில், இது விடயம் தொடர்பாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், இதற்கமைய உரிய பதில் கிடைக்காவிட்டால், எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அந்தப் பணியாளர் தெரிவித்தார்.