போக்குவரத்து விதி மீறல்களுக்கான அபராத தொகையை அரசாங்கம் அதிகரித்துள்ளதையடுத்து தேசிய வைத்தியசாலையின் திடீர் விபத்து பிரிவில் அன்றாடம் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக தேசிய வைத்தியசாலையின் தாதியர் பயிற்சி அதிகாரி புஷ்பா ரம்யானி சொய்சா தெரிவித்துள்ளார்
அரசாங்க தகவல் திணைக்கள உத்தியோகபூர்வ இணையதளத்திற்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் தேசிய வைத்தியசாலையில் திடீர் விபத்து பிரிவில் நாளாந்தம் 300 தொடக்கம் 400 பேர் வரை சிகிச்சைக்காக வருகைத் தருவர் என்றும் தற்போது அவ்வெண்ணிக்கை 200 தொடக்கம் 250 ஆக குறைவடைந்துள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் பண்டிகைக் காலங்களில் விபத்துக்கள் அதிகரித்த போதிலும் அபராதத் தொகை அதிகரித்த பின்னர் போக்குவரத்து விதிகளை சாரதிகள் மிக கவனமாக பின்பற்றுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த ஆண்டு ஆரம்பம் தொடக்கம் தற்போது வரையான காலப்பகுதியில், திடீர் விபத்து சிகிச்சை பிரிவிற்கு சிகிச்சை பெற்றவர்களின் எண்ணிக்கை 94,000 ஆகும். கடந்த ஆண்டு 102,132 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். இந்த ஆண்டு நவம்பர் மாதம் மட்டும் திடீர் விபத்து சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7465 ஆகும்.
இதுவே கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8342 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். அத்தோடு தேசிய வைத்தியசாலையில் திடீர் விபத்து சிகிச்சை பிரிவிற்கு வருகிறவர்களின் 20 வீதமானவர்கள் வீதி விபத்துக்களால் பாதிக்கப்பட்டவர்கள் என்றும் அத்தொகை தற்போது18 வீதமாக குறைவடைந்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.