இந்த ஆண்டு மட்டும் உலகம் பூராவும் 57 ஊடகவியலாளர்கள் தமது பணியில் ஈடுபட்டிருந்த போது கொல்லப்பட்டுள்ளனர் என்று எல்லையற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.
அவ்வாறு கொல்லப்பட்டவர்கள் அனைவரும் உள்நாட்டிலேயே கொல்லப்பட்டுள்ளனர் என்றும் சிரியாவில் மட்டும் இந்த ஆண்டு 11 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் ஊடக சுதந்திரத்திற்கான குழு சுட்டிக்காட்டியுள்ளது. மேலும் ஆப்கானிஸ்தானில் 10 ஊடகவியலாளர்களும் மெக்சிகோவில் 9 பேரும் ஈராக்கில் 5 பேரும் இந்த ஆண்டு கொலை செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 2015ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சியேற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள குறித்த குழு கடந்த ஆண்டு உலகம் முழுவதும் 67 ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது.
உயிர் அச்சுருத்தல்கள் காரணமாக சிரியா, ஈராக், லிபியா, யேமன், ஆப்கானிஸ்தான் மற்றும் ப்ரூண்டி ஆகிய நாடுகளின் ஊடகவியலாளர்கள் வௌிநாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். இந்த ஆண்டு 9 வலைப்பூ எழுத்தாளர்களும் 8 ஊடக நிறுவன ஊழியர்களும் கொலை செய்யப்பட்டுள்ளனர் என்றும் அக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, தீவிரவாத செயற்பாடுகள் காரணமாகவே ஊடகவியலாளர்களின் உயிருக்கு அச்சுருத்தல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள எல்லையற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், ஊடகவியலாளர்களாக பணியாற்றுவோரை இலக்கு வைத்து அதிக தாக்குதல் நடத்தப்படுவதாகவும் ஆப்கானிஸ்தானில் அவ்வாறு 10 ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர் என்றும் கடந்த ஜனவரி மாதம் தனியாருக்கு சொந்தமான தொலைக்காட்சி நிறுவனத்தின் மீது மினி பஸ்ஸை பயன்படுத்தி நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் மூன்று பெண்கள் உயிரிழந்தனர் என்றும் எல்லையற்ற ஊடகவியலாளர் அமைப்பு தெரிவித்துள்ளது.
ஊடகவியலாளர்களின் உயிர் அச்சுருத்தல் தொடர்பில் ஆராய்ந்து பாதுகாப்பளிப்பதற்காக ஐநா செயலாளர் நாயகம் விசேட பிரதிநிதிகள் குழுவொன்றை நியமித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அராப் நியுஸ்