கிளிநொச்சி கல்வி வலயத்தில் ஏற்பட்டுள்ள ஆசிரியர் பற்றாக்குறையினால் பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன என்று வலயக் கல்விப் பணிப்பாளர் கந்தசாமி முருகவேல் விசனம் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி கல்வி வலயத்தில் இருந்து 98 ஆசிரியர்கள் இடமாற்றம் பெற்று சென்றுள்ள நிலையில் இதுவரை நான்கு ஆசிரியர்கள் மட்டுமே புதிதாக வந்துள்ளனர். எனினும் புதிதாக 14 ஆசிரியர்கள் கிளிநொச்சி கல்வி வலயத்திற்கு வருவார்கள் என்று ஏற்கனவே பெயர்பட்டியல் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் பாடசாலைகளை நடத்துவதில் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. ஆசிரியர் ஆலோசகர்கள் பலர் ஆசிரியர்களாக செல்லவுள்ளனர். சில ஆசிரியர்கள் அதிபர்களாக பதவியேற்கவுள்ளனர். இந்நிலையில் கிளிநொச்சி கல்வி வலயத்தில் ஆசிரியர் பற்றாக்குறை அதிகமாக ஏற்பட்டுள்ளது.
கிளிநொச்சி கல்வி வலயத்தில் 112 பாடசாலைகள் உள்ளன. அதில் 104 பாடசாலைகள் இயங்குவதுடன் சுமார் 32051 மாணவர்கள் கல்விப் பயில்கின்றனர். அக்கராயன், ஜெயபுரம், பூநகரி, கண்டாவளை ஆகிய பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளில் அதிகமாக ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுகிறது என்று அவர் மேலும் தெரிவித்தார்.