தோட்டத் தொழிலாளர்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் தொடர்பில் ஆசிய பசுபிக் பிராந்திய சர்வதேச தொழிற்சங்க சம்மேளனம் தலையிடவேண்டும் என்று சம்மேள பொதுச்சபை அங்கத்தவரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவருமான சட்டத்தரணி கா. மாரிமுத்து தெரிவித்துள்ளார்.
நேபாளத் தலைநகர் காட்மண்டுவில் நடைபெற்ற 14 ஆசிய பிராந்திய சர்வதேச தொழிற்சங்க சம்மேளனத்தின் 14வது பொதுச்சபை கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், பதினெட்டு மாத இழுபறியின் பின்னர் கைச்சாத்திடப்பட்ட தேயிலை மற்றும றப்பர் தோட்டத் தொழிலாளர் சம்பள அதிகரிப்பு தொடர்பான கூட்டு ஒப்பந்தம் குறித்து முதலாளிமார் சம்மேளனத்திற்கும் அதனைச் சார்ந்த கம்பனிகளுக்கும் தௌிவின்மை காணப்படுகிறது. இவ்வொப்பந்த முறைமையில் பல நடைமுறைச் சிக்கல்களும் சர்ச்சைகளும் காணப்படுகின்றன. இவற்றுக்கு சிறந்த காத்திரமான தீர்வைப் பெறுவதற்கும் முறுகல் நிலையை நிவர்த்தி செய்வதற்கும் ஆசிய பசுபிக் பிராந்திய சர்வதேச தொழிற்சங்க சம்மேளனம் முன்வரவேண்டும்.
இச்சம்மேளனத்தினூடாக கூட்டு ஒப்பந்த முறைமைக்கு ஏதுவான விசேட வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துடன் நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகள் வழங்கப்படுமானால் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை எட்டக்கூடிய சாத்தியங்கள் காணப்படுகிறது.
பெருந்தோட்டங்கள் முறையாக பராமரிக்கப்படாமையினால் குளவிக்கொட்டுக்கு ஆளாகி சில தோட்டத் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். இது மிகவும் கவலைக்குரிய விடயம். அத்தோடு பல தொழிலாளர்கள் பாம்புக்கடிக்கும் சிறுத்தை தாக்குதல்களுக்கும் உள்ளாகியுள்ளனர். இதனை தொடரவிடக்கூடாது. தொழிலாளர்களின் இத்தகைய பிரச்சினைக்கு சம்மேளனம் முன்வந்து தீர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.