இலங்கையில் இறுதி யுத்தம் இடம்பெற்ற பகுதிகளில் காணப்படும் பதுங்குகுழிகள் தற்போதும் அப்படியே காணப்படுவதால் தாம் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தப் பதுங்கு குழிகளை மூடிதருமாறு புதுமாத்தளன், அம்பலவன்பொக்கணை, வலைஞர்மடம், முள்ளிவாய்க்கால் முதலான பகுதிகளை சேர்ந்த விவசாயிகளும், பொதுமக்களும் முல்லைத்தீவு மாவட்டச் செயலரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இலங்கையில் இடம்பெற்ற போரின்போது, போரில் ஈடுபட்டவர்களினாலும், பொது மக்களினாலும் தற்காப்புக்காக தோண்டப்பட்ட ஆயிரக்கணக்கான பதுங்கு குழிகள் இந்தப் பகுதிகளில் காணப்படுகின்றன.
இதனால் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாத நிலைமை இருப்பதாக அந்த கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த பதுங்கு குழிகள் மூடப்படாதுள்ளமை காரணமாக சுமார் 10 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பில் விவசாயம் செய்ய முடியவில்லை. இதனால், சுமார் 400 இற்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, இந்தப் பதுங்கு குழிகளில் மழை வெள்ளம் தேங்கி நிற்பதனால் டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய அபாயம் பெருக்கம் காணப்படுவதாகவும் முல்லைத்தீவு மாவட்ட விவசாயிகளும், பொதுமக்களும் தெரிவித்துள்ளனர்.