இலங்கை போக்குவரத்துச் சபையின் வவுனியா சாலை ஊழியர்கள் நேற்று (01) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
பஸ் பணியாளர்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலே இந்த பணிப் புறக்கணிப்புக்கு காரணமாய் அமைந்துள்ளது.
வவுனியா புதிய பஸ் நிலையத்தில் முல்லைத்தீவில் இருந்து வந்த இலங்கை போக்குவரத்து சபை பஸ் மற்றும் தனியார் பஸ் சாரதி நடத்துனர்களுக்கிடையில் கைகலப்பு ஏற்பட்டுள்ளளது. இந்த கைகலப்பில் ஈடுபட்ட இருவர் வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கைகலப்பின் காரணமாக தமக்கு பாதுகாப்பு இல்லை எனத் தெரிவித்து புதிய பஸ் நிலையத்தில் இருந்து இலங்கை போக்குவரத்துச் சபை பஸ் பணியாளர்கள், பழைய பஸ் தரிப்பிடத்தில் பஸ்களை வீதியில் நிறுத்தி அங்கிருந்த ஊழியர்களுடன் இணைந்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இலங்கை போக்குவரத்துச் சபை வவுனியா வீதி முகாமையாளரை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும், பழைய பஸ் தரிப்பிடத்தில் இருந்தே தமது சேவையை தொடர அனுமதிக்க வேண்டும் என்னும் இரு கோரிக்கைகளை முன்வைத்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, இந்தப் பிரச்சினையை தீர்ப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.